தர்பார் டீமின் ‘எறும்பு ஏரோபிளேன் ஓட்டிய கதை’!

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் தர்பார் திரைப்படம் நாளை(ஜனவரி 9) வெளியாகிறது.


ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்றாலே அதற்கான புரோமோஷன் விளம்பரங்கள் இலவசமாகவே மீடியாக்களால் வழங்கப்பட்டு வருவது சிவாஜி படம் தொடங்கி தர்பார் வரை நீடிக்கிறது. இந்தப் படத்தை பற்றிய எந்த செய்தியாக இருந்தாலும் அதனுடைய உண்மை தன்மை ஆராய படாமல் ஊடகங்கள் செய்தியாகவெளியிடும் போக்கு தமிழ் ஊடகங்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அது சம்பந்தமான உண்மையான தகவல்கள் நேர்மையோடு எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு ஆவணப்படுத்தப்படுவதில்லை. பரபரப்புக்காக படத்தின் விளம்பரத்துக்காக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சொல்லக்கூடிய புனைவுகளை மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன ஊடகங்கள் என்கிற விமர்சனம் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து வருகிறது.

நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த லைகா நிறுவன அதிகாரிகள் உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளில் தர்பார் படம் வெளியிடப்படுகிறது என்கிற ஒரு அப்பட்டமான தவறான தகவலை செய்தியாளர்களிடம் கூறினார்கள்.

நடிகர் ரஜினிகாந்தை நடிகராக பார்க்காமல் அவரை ஒரு தலைவராக மனதளவிலும் தங்கள் எழுத்துக்கள் மூலமும் எழுதுகின்ற பத்திரிகையாளர்கள் அப்படியா என்று வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர். 7000 திரையரங்குகள் தமிழ் படத்திற்கு உலகம் முழுமையும் எப்படி சாத்தியம் என்பதற்கு படத் தயாரிப்பு நிறுவனத்திடம் பதில் இல்லை.

தமிழகத்தின் திரையரங்கு உரிமை, தமிழ் தொலைக்காட்சி உரிமை, தமிழ் டிஜிட்டல் உரிமை இவற்றின் மூலம் மட்டும் தர்பார் படத்திற்கு கிடைத்திருக்கும் வியாபார வருவாய் 121 கோடி ரூபாய். தர்பார் படத்தில் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் 60% வருவாய் தமிழகத்திலும் தமிழ்மொழி வெளியீட்டிலும் எடுக்க வேண்டும். இதற்கு படத்திற்கான புரமோஷனாக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை. ஏதாவது பப்ளிசிட்டி ஸ்டண்ட் போல சில செய்திகளையும், உண்மைக்கு நெருக்கமாக வராத தகவல்களையும் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனர்.

இந்தி மொழி உரிமை 17 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இதற்காக ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்கின்றனர்.

தெலுங்கு டப்பிங் உரிமை 7.5கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த், முருகதாஸ் இருவரும் கலந்து கொள்கின்றனர். ஆனால்

தமிழ் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டது. இதற்கு காரணம் நான் என்ன சொன்னாலும் எந்த விசாரணையுமின்றி அதை மிகைப்படுத்தி எழுதுவதற்கு தமிழ் ஊடகங்கள் தயாராக இருக்கிறது என்பதுதான். அதனால்தான் ஏழாயிரம் திரையரங்குகள் என்பதை அடிப்படை ஆதாரமின்று போகிற போக்கில் அறிவிக்க முடிகிறது.

தமிழ் படங்களை 7000 திரையரங்குகளில் உலகம் முழுமையும் திரையிடப்படுவதற்கு, இப்போது அல்ல; எப்போதும் நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று என்கின்றனர் சினிமா வியாபாரிகள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய 1000 திரையரங்குகளில் 600 திரையரங்குகள் தர்பார் படத்தை திரையிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதேபோன்று கேரளாவில் 150, கர்நாடகாவில் 200, வட இந்தியாவில் அதிகபட்சமாக 400 என மொத்தமாக 1350 திரையரங்குகளில் தர்பார் படம் ரிலீஸ் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. வெளிநாடுகளில் தமிழ் படங்கள் அதிகமாக திரையிடப்படுவது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் தான். அங்கெல்லாம் அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் தர்பார் படத்தை ரிலீஸ் செய்ய இயலும். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் தமிழ் படங்கள் வெளிவருவது உண்டு. அங்கெல்லாம் அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் தர்பார் படத்தை திரையிடுவதற்கு போராட வேண்டியிருக்கும்.

வியாபார ரீதியான உண்மை நிலை இப்படி இருக்கும் போது, தவறான தகவலை தமிழ் ஊடகங்களில் கூற வேண்டிய அவசியம் லைகா நிறுவனத்திற்கு ஏன் ஏற்பட்டது என்பதுதான் தமிழ் சினிமா மீது ஆர்வம் கொண்டு அதைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளும் சினிமா ஆர்வலர்கள் கேட்கும் கேள்வி.

சினிமா வியாபாரம் அதைப்பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பவர்கள் பொறுப்பில் இருந்தால் பொறுப்பற்ற பொய்யான தகவல்கள் தொடர்ந்து கூறப்பட்டு வரும் என்பதற்கு லைகா நிறுவனம் சிறந்த உதாரணமாக இருந்து வருகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.