தர்பார் வியாபாரம்: லாபமா, நஷ்டமா?

பொங்கல் பண்டிகைக்கான பரபரப்பு திரையரங்குகள் மத்தியில் தொடங்கி இருக்கிறது.


தர்பார் படப்பிடிப்பு தொடங்கியது முதல் இன்று வரை அந்தப் படம் சம்பந்தமான செய்திகள் பரபரப்பாக வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னதாகவே தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகக் கருதப்படும் ரஜினிகாந்த் படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சி திரையிட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாரபூர்வமாக அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, “கடந்த காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களுக்குச் சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தர்பார் படத்தின் சிறப்புக் காட்சிக்காக முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை” என்று கூறியுள்ளார். இதன் மூலம் தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘எங்களை வந்து பாருங்கள்’ என்று அவர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

பிகில் படத்துக்கும் இது போன்று கடைசி வரை இழுத்தடிக்கப்பட்டு, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்த பின்னரே சிறப்புக் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டது. அதே போன்று தர்பார் படத்துக்கும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

திருச்சி விநியோகப் பகுதி உரிமையை ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் வாங்கி இருக்கிறார். அதே போன்று நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் போட்டியிடக் கூடாது என்று ரஜினி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இவ்வாறு ஆளுங்கட்சிக்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கி கொண்ட ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் சிறப்புக் காட்சி, அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை போன்ற விஷயங்களில் தமிழக அரசு எந்த இடையூறும் செய்ய வாய்ப்பு இல்லை என்கிறது அரசியல் வட்டாரம்.

படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கி இருப்பதால், படத்துக்கான புரொமோஷன் அதிரடியாக இருக்கும் என்கின்றனர் தயாரிப்பு வட்டாரத்தில். இத்தனை சாதகமான அம்சங்கள் தர்பார் படத்துக்கு இருந்தும் படத்துக்கான எதிர்பார்ப்பு, சினிமா பார்வையாளர்கள் மத்தியில் மிகக் குறைவாகவே இருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்து நீண்ட இழுபறிக்குப் பின் வியாபாரம் முடிந்து இருப்பது தர்பார் படத்துக்குத் தான் என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். கடந்த வருடம் வெளியான பேட்ட படம் சராசரி வெற்றியைப் பெற்றது. இருந்தபோதும் இந்தியாவின் நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்துக்குத் தடுமாற்றத்துடன்தான் வியாபாரம் முடிந்துள்ளது.

படத்தின் தமிழக உரிமை எதிர்பார்த்த அளவுக்கு அதிகபட்ச விலைக்கு வியாபாரம் ஆகவில்லை.

கேரள மாநிலத்தின் விநியோக உரிமை: 5.5 கோடி ரூபாய்.

தெலுங்கு உரிமை: 7.5 கோடி ரூபாய்

கர்நாடக உரிமை: 7 கோடி ரூபாய்

இந்தி உரிமை: 17 கோடி ரூபாய்

டிஜிட்டல் உரிமை: 25 கோடி ரூபாய்

வெளிநாட்டு விநியோக உரிமை: 33 கோடி ரூபாய்

ஆடியோ உரிமை: 5 கோடி ரூபாய்

தொலைக்காட்சி உரிமை: 33 கோடி ரூபாய்

மேற்கண்ட வியாபார கணக்குகளின் படி தமிழக உரிமை 63.15 + (சென்னை நகர உரிமை சுமார் 5 கோடி ரூபாய்) + பிற உரிமைகள் 126.70 ஆக மொத்தம் 189.85 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் அளவுக்குக்கூட படத்தின் மொத்த வியாபாரம் இல்லை. தமிழ் சினிமா மீது தீராத காதல் கொண்ட சுபாஷ்கரன் கோடிகளில் முதலீடு செய்து படத்தைத் தயாரித்தாலும் அதன் வியாபாரத்தைக் கவனிக்க நம்பிக்கையோடு நியமனம் செய்து இருக்கும் நபர்கள் சினிமா வியாபாரத்தைப் பற்றிய அனுபவ அறிவு இல்லாத நபர்களாக இருப்பதால் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் அனைத்தும் படங்களும் அவை வெளியாவதற்கு முன்பே நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் முதலீடு செய்வதற்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் புதிது புதிதாக வருகின்றனர். ஆனால், அவர்களை நம்ப வைத்து மொட்டையடிக்கும் செயலைத் தொடர்ச்சியாக ஒரு கூட்டம் இங்கு செய்து வருகிறது. அந்தக் கூட்டத்தைத் தொடக்கத்திலேயே இனம் கண்டு புறக்கணிக்காத வரை சுபாஷ்கரன் போன்ற வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ் சினிமாவில் நஷ்டத்தைச் சந்திப்பது தொடர்கதையாக இருக்கும் என்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.

- இராமானுஜம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.