பெண்ணே...!நாகரிகம் நல்லதுதான்!!

நடை உடையை மாற்றினாலும்
உடையில் சிக்கனம் தவிர்த்துக்கொள்.
தொப்புளில் தோடும்
தொடை தெரியும் உடையும்
நாகரிகம் என்றாகாது...

வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும்
கைகொடுத்து கன்னம் உரசு
தவறில்லை..
இருக்கும் இடத்தோடு இசைந்தே நட..!
இருந்தும்,
நம் பண்பாட்டை வேலியாக்கி
உனை நீயே காத்துக்கொள்...!

எல்லைகள் மீறி
தொல்லைக்குள் வீழ்ந்து
நம் அடையாளங்களை தொலைத்துவிடாதே...!

வலைத்தளங்களில்
வழுக்கி விழுந்துவிட்டு
முகநூலில் முகத்தையே இழந்துவிட்டு
விம்மி அழத்தேவையில்லை..

ஆணும் பெண்ணும் சரிநிகர்தான்
எங்கும் எதிலும் சமத்துவம் தான்
அதற்காக,
போதையும் புகையும் தேவையில்லை..
ஆங்கிலோயர் விரித்த வலை - அதில்
சிக்கிக்கொண்டால் மீட்சியில்லை.

எம் மொழி பேசினாலும்
தமிழ்மகள் நீ என்பதை
நினைவில் கொள்..!
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்
தாய் நாட்டின் தனிப் பண்பை செயலில் கொள்..!

இத்தனையும் கண்கொண்டு பார்க்கையிலே
உள்ளுக்குள் தீ யென்று
உயிரை எரிக்கிறது..
பெண் பிள்ளை பெற்ற
தாய் என்பதால்.....!!

-சங்கரி சிவகணேசன்
Blogger இயக்குவது.