கமலின் தொடர் முயற்சி-மவுனத்தில் ரஜினி??

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசனும், விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தும் ‘மக்கள் நலனுக்காக அரசியலில் இணைந்துப் பணியாற்றத் தயார்’ என்று கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தனர். இந்த நேரத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடந்த விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், “தனக்கு உதவிய தமிழகத்துக்கு, உதவ வேண்டிய கடமை ரஜினிக்கு உண்டு” என்று கூறினார்.


இந்த நிலையில்தான் இருவரும் கூட்டணியில் இணைவார்களா என்ற பேச்சு தற்போது மீண்டும் எழத் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக தினத்தந்தி மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இருவரும் கூட்டணியில் இணைவது சாத்தியமானது என்று 31 சதவிகிதத்தினரும், நடக்காது என 61 சதவிகிதம் பேரும், கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என 8 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

திருச்சி சங்கம் ஹோட்டலில் நேற்று நடந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 53 வாரங்கள்தான் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கமல்ஹாசன் இவ்வளவு தீவிரமாக செயல்பட்டு வரும் சூழலில், அதிமுக, திமுக என்ற இருபெரும் கட்சிகளை எதிர்கொள்ள ரஜினி-கமல் கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் கூட்டணி அமையுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

இதுதொடர்பாக ரஜினிகாந்தை சந்திப்பவர்கள் நம்மிடம் சிலவற்றை பகிர்ந்துகொண்டனர். “மக்களவைத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென ரஜினி சாரிடம் கமல்ஹாசன் கேட்டார். அதாவது 6 மாதங்களுக்கு முன்பு தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அப்போது தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் ரஜினியை சந்தித்து பொதுவான விஷயங்கள் குறித்துப் பேசினார்.

அதற்கு அடுத்த நாள் மும்பை ஷுட்டிங்கில் இருந்த ரஜினிக்கு கமல்ஹாசனிடமிருந்து போன் வந்தது. மக்களவைத் தேர்தலில் தன்னை ஆதரித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று கமல் கேட்டார். அதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுத்தார். இறுதியாக நேரில் சந்தித்தும் ஆதரவு கேட்டார். ஆனால் ரஜினி, ‘நானும் கட்சி ஆரம்பிக்கப் போறேன் கமல். இந்த நேரத்துல உங்களுக்கு எப்படி ஆதரவு தர முடியும். உங்களுக்கு ஆதரவு தந்தா என்னோட ரசிகர்கள் என்ன நினைப்பாங்கனு தெரியாது’ என கமல் மனது புண்படாத அளவுக்கு சாதுர்யமாக பேசி திருப்பி அனுப்பினார்” என்று தெரிவித்தவர்கள், தற்போதைய கமல்ஹாசன் முயற்சி குறித்தும் விவரித்தனர்,

“இப்போது மறுபடியும் சிலர் மூலமாக ரஜினி சார்கிட்ட கூட்டணி பத்தி பேச ஆரம்பித்துள்ளார் கமல். ஆனா ரஜினி சார் இன்னும் அதுபத்தி எந்த முடிவும் எடுக்கல. வரும் செப்டம்பர் மாதம் அவர் கட்சி ஆரம்பிக்க இருக்காரு. அதுக்குப் பிறகுதான் எதுவாக இருந்தாலும் யோசிப்பாரு” என்று அவர்கள் சொல்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.