ரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன்?


தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொறுப்புக்களிலிருந்தும் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் விலகுவதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் நாளை வெளியிடவுள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூலமாக  கட்சியின் தேசிய அமைப்பாளரும்இ தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதாக அந்தக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதனையடுத்தே விந்தன் கனகரட்ணம் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து விலகுவதான அறிவிப்பை தலைமைக்குத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு நாளை உத்தியோகபூர்மாக அறிவிக்க உள்ளதாக விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  ரெலோ கட்சிக்கு வழங்கப்பட்ட ஆசன ஒதுக்கீட்டில் விந்தன் கனகரட்ணம் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டிருந்தார். எனினும் அந்தக் கட்சியின் செயற்குழு அதற்கு அனுமதியளிக்கவில்லை.

எனினும் ரெலோவிலிருந்து விலகி விந்தன் கனகரட்ணம் வேறு கட்சியில் இணைவது தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்தவிட்டார். அதுதொடர்பில் எந்தத் தீர்மானத்தையும் தான் எடுக்கவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளைஇ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூலமாக எமது கட்சியின் தேசிய அமைப்பாளரும்இ தலைமைக்குழு உறுப்பினருமான சுரேந்திரன் குருசுவாமியை வெற்றி வேட்பாளராக களமிறக்குவதென 19.01.2020 அன்று வவுனியாவில் இடம்பெற்ற தலைமைக்குழு கூட்டத்திலும் 20.01. 2020 அன்று கூடிய யாழ்ப்பாணம் நிர்வாகக் குழு கூட்டத்திலும் மேற்கண்டவாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்திற்கென ஒதுக்கப்பட்ட ஒற்றை ஆசனத்தை நீண்ட கலந்துரையாடல்களின் பின் நீண்ட அரசியல் வரலாறு கொண்ட குடும்பத்தை சேர்ந்தவரும் சிறந்த கல்வியலாளருமான சுரேந்திரன் குருசுவாமிக்கு ஒதுக்குவதன் மூலம் நிர்வாகத் திறனும் மும்மொழி தேர்ச்சியும் ஆளுமையும் மிக்க ஒருவரை எமது கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பமுடியும் என்பதுடன் இவரின் வெற்றியின் மூலம் யாழ்.மாவட்டத்தில் எமது கட்சி இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப்பெற முடியுமெனவும் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எமது கட்சியின் செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட தமிழ் மக்கள் அனைவரும் எமது வெற்றி வேட்பாளருக்கு உங்களது முழுமையான ஆதரவினை வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றுள்ளது.
Blogger இயக்குவது.