போலீஸ் யாருக்காக வேல செய்யணும்? மிரட்டும் பிரபுதேவா!

பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நடிக்கும் 50-ஆவது திரைப்படமான பொன் மாணிக்கவேல் படத்தின் ட்ரெயிலர் இன்று(ஜனவரி 21) வெளியானது. ‘ஒரு போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டுக்காக வேலை செய்யணுமா? இல்ல பப்ளிக்குக்காக வேலை செய்யணுமா’ என்று பிரபுதேவா மிரட்டல் தொனியில் கேட்கும் வசனத்துடன் ட்ரெயிலர் ஆரம்பமாகிறது. இதுவரை கலகலப்பான கதாபாத்திரங்களில் நடித்துவந்த பிரபுதேவா, முற்றிலும் வேறுபட்ட விதத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இறுக்கமான முகத்துடன் அதிரடி ஆக்‌ஷனில் அவர் களமிறங்கியிருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. பிரபுதேவாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியப் புள்ளியாக இந்த கதாபாத்திரம் அமையும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். காவல்துறை அதிகாரிகளின் கொலையும் அதற்கான விசாரணையுமாக பொன் மாணிக்கவேல் படத்தின் களம் அமைந்துள்ளது என்பதை ட்ரெயிலர் உணர்த்துகிறது. இந்தப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்கள் இறுதியாக இந்தப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றநிலையில் இந்த ட்ரெயிலரும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தத் திரைப்படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.