கனடாவில் தமிழக மாணவிக்குக் கத்தி குத்து!

கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்குக் கத்தி குத்து விழுந்துள்ளது. இதனால் படுகாயமடைந்த மாணவி உயிருக்குப் போராடி வருகிறார்.


நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த ஆல்பர்ட் ராஜ்குமார் என்பவரின் மகள் ஏஞ்சலினா ரேச்சல். குன்னூரில் பள்ளிக் கல்வியையும், பெங்களூருவில் இளங்கலை கல்வியையும் முடித்த இவர், ஒரு வருட முதுகலை படிப்பான supply chain management, படிப்புக்காகக் கனடா சென்றுள்ளார். அவரது படிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.

கனடா யோர்க் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் இவர், கடந்த 23ஆம் தேதி பல்கலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ரேச்சலை கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி சிறிது தூரம் இழுத்துச் சென்று பின்னர் அங்கே வீசிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அந்த மாணவி அங்கேயே சரிந்து விழுந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக மாணவியைக் கத்தியால் குத்திய அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். அந்த நபர் குறித்த சில தகவல்களை டொரோண்டோ போலீஸ் 23ஆம் தேதி வெளியிட்டது. அந்த நபரின் உயரம் சுமார் 5'11'' அடி இருக்கக் கூடும் என்றும், ரேச்சலை தாக்கிய பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல்களை முதலாகக் கொண்டு அந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சந்தேகிக்கப்படும் அந்த நபர் கனடா போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆல்பர்ட் ராஜ்குமார் கூறுகையில், தனது மகள் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பார். ஒரு இந்தியர் போலத் தோற்றமளிக்கும் ஒரு மாணவர் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் எனது மகளைத் தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று காலை என் மகளிடம் பேசினேன். அன்று இரவு கனடா அதிகாரிகளிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. ஏஞ்சலினா ரேச்சல் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். என்ன நடந்தது என்று தெரியவில்லை. குழப்பமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

பிபிசி ஊடகத்திடம் அவர் கூறுகையில், எனது மகளின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஏஞ்சலினா ரேச்சல் துப்பாக்கியாலும் சுடப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனால், இதுகுறித்து கனடா ஊடகங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. இந்திய வெளியுறவுத் துறை உதவியுடன், விசா கிடைத்ததும் கனடா செல்லவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். அதன்படி ஆல்பர்ட் ராஜ்குமார் இன்று கனடா புறப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேச்சல் குடும்பத்துக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவரது குடும்பத்தினருக்கு உடனே விசா கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.