தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!!


தமிழ் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத் திங்கள் முதல் நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தமிழ்ச் சமுதாயம் கொண்டாடும் பொங்கல் விழா மத, இன வேறுபாடுகள் எதுவுமின்றி உழைப்பையும், உழைப்புக்கு உதவியவர்களையும் எண்ணி நன்றி தெரிவிக்கும் இனிய பண்பாட்டு திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் மகத்தான திருவிழாவாக, தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் முன்னெடுக்கப்படுகின்றது.


அந்தவகையில் எமது இனத்தின் இருப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எமது அரசியல் வேணவாவினை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்க நிலம்-புலம்-தமிழகம் இணைந்த உலகத்தமிழர் பெரும்பரப்பில் செயற்பட்டுவரும் தமிழ்த் தேசியசக்திகள் அனைத்தும் பிறக்கின்ற தமிழ்ப் புத்தாண்டில் உறுதியேற்க முன்வருமாறு, முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் சார்பிலும், மண்ணுறங்கும் மாவீரத்தின் பெயராலும், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அன்புரிமையுடன் அறைகூவல் விடுக்கின்றது.

கடந்த சனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சிங்களவர்களால் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்படுகொலையாளி தமிழர்களின் எல்லைப்பகுதியான அனுராதபுரத்தில் தனது அங்குரார்ப்பண வைபவத்தை நிறைவு செய்தமை தமிழர்களுக்கு தான் அடுத்த துட்டகாமினி என்ற செய்தியைச் சொல்லாமல் சொல்லியுள்ளார். இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் பௌத்த மதத்திற்கு முதலிடம் என்றும் மார்தட்டி வரும் பௌத்த பேரினவாதத்தின் எக்காளமிடும் கூற்றுக்களை சிங்களத்தின் புதிய சனாதிபதியின் முதல் உரை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது. இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் தமிழர்கள் தான் என்ற அறிவும் ஆய்வும் இல்லாமல் பாளி மொழியில் புனையப்பட்ட மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றைத் திரிவுபடுத்திக் கூறும் சிங்கள பௌத்த பீடங்களுக்கும் பௌத்த தேசியச் சக்திகளுக்கும் இவரது உரை புளகாங்கிதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

கோட்டாபய சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் சிங்கள தேசியவாத ஆதிக்கம் மேலும் பெருகத்தொடங்கியுள்ளது. இனப்படுகொலையாளிகளை நீதியின் பிடியில் இருந்து தப்பவைப்பதற்கும் தமிழர்களை தொடர் அச்சுறுத்தல் நிலைக்குள் வைத்திருக்கும் முகமாகவும் புதிய சனாதிபதி அவர்களுக்கு உயர் பதவிகளையும் இராசதந்திரி நிலைகளையும் வழங்கியுள்ளார், அதேநேரத்தில் பல ஆண்டுகளாகச் சிறையில்அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதிவழங்க மறுத்து வருகின்றது சிங்கள அரசு. 27 வருடங்களாக நீதி கிடைக்காமல் சிறையில் இருந்த தமிழ் அரசியற்கைதி மரணமடைந்தது இலங்கையில் நீதித்துறையின் பாரபட்சத்தை பறைசாற்றுகிறது.

இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் மனிதப்பேரவலத்தை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நடந்தேறி பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்கூட அதற்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது மாத்திரமல்லாது வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, நில விடுவிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறியே ஆகவேண்டிய, அவ்விடயங்களுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட சிறிலங்கா அரசும் அதன் படைகளும் வெளிப்படையாகவே மறுத்துரைத்து நிற்கின்றது.

இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் தமது உறவுகளை தேடியும் , தமது உறவுகளுக்கான நீதிக்காகவும் போராடிவருகின்றனர். இத்தருணத்தில் தான் உலகத் தமிழர் பெரும்பரப்பில் வலுவான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும், அதன் வழியே தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான நிரந்தரத் தீர்வை நோக்கிய சூழமைவை உருவாக்கவும் நாம் அனைவரும் தொடர்ந்தும் போராட முன்வரவேண்டும்.

உலகின் மூத்த குடிகளாகிய நாம் எமக்கென்று மொழி, கலை, கலாசாரம், உணவுமுறை, வரலாறு, இலக்கியம், இலக்கணம் என்பவற்றைப் பல்லாயிரம் வருடங்களுக்குமுன்பே படைத்துள்ளோம். இதற்கு சமகாலத்தில்செய்யப்பட்ட கீழடி ஆய்வு ஆதாரமாக உள்ளது. எனவே2020ம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு 2051 தை1ஆம் நாள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளிலிருந்து நமது சுதந்திர தாயகத்தின் விடிவிற்காக ஒன்றுபட்ட குரலில், ஒன்றாய், ஒற்றுமையாய் முனைப்புடன் முன்னகர்வோம் வாரீர்! அந்தவகையில் எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும் வரை எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம்.-

தமிழர்கள் நிம்மதியோடும் பாதூகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்றால் எங்கள் தாயக மண்ணில் தமிழீழ அரசை மீள்கட்டியெழுப்ப வேண்டும். அந்த நம்பிக்கையுடன் பொங்கல் புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம்.

உலகத் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.