இராணுவத்தை சிவில் நிர்வாகத்தில் நியமிப்பது பீதி!

தமிழ் மக்களுடைய மனங்களை வெல்லுவதற்கு முயற்சிப்பதாக இருந்தால் இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாகங்களிலோ அல்லது மக்களோடு நேரடியாக தொடர்புடைய விடயங்களிலோ நியமிப்பதை தவிர்த்து கொள்வது மிகநல்ல விடயம் என்றுதான் நாங்கள் கருதுகிறோமென முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.


தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களிடையே வவுனியாவில் இன்று பிரத்தியேக அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்‌ பின்னர்‌ கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முக்கியமாக எங்களுடைய கட்சியை எப்படி கிராமங்கள் தோறும் கட்டி எழுப்புவது என்பது தொடர்பாகவும், வேலைத்திட்டங்களை விரிவாக எப்படி கொண்டு செல்வது என்பது பற்றியும், அதற்கான என்ன நடைமுறை வேலைத் திட்டங்கள் செய்யப்படவேண்டும் என்பது பற்றிய தீர்மானங்களையும் நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

அதேபோல எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே நாங்கள் எவ்வாறான அணுகுமுறையை கடைபிடிக்க போகின்றோம் எனவும் கலந்துரையாடினோம்.

ஏனென்றால் பலரும் நினைப்பது போல கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டிலே தான் நாங்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் எடுப்போம் என்று இல்லை.

எங்களைப் பொறுத்தவரையில் ஒரு புதிய விதமான அணுகுமுறை உள்ளது. ஏனென்றால் ஜனாதிபதி தேர்தலின் போது இருந்த நிலைமை என்பது வேறு. அங்கே இரண்டு வேட்பாளர்களில் யாரை தேர்வு செய்வது என்ற தெரிவில் மட்டும்தான் அந்த தேர்தல் சம்பந்தப்பட்டது.

ஆனால் இங்கே எங்களுடைய மக்களினுடைய பிரதிநிதிகளை எங்களுடைய மக்கள் நேரடியாக தெரிவு செய்கின்ற தேர்தல் ஒன்றை எதிர்நோக்க போகிறார்கள்.

அது பெரும்பாலும் ஏப்ரல் மாதம் கடைசியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடக்கக்கூடும்.

அந்த தேர்தலிலை நாங்கள் எவ்வாறு எதிர்நோக்க போகிறோம் என்கிற விடயத்திலே ஒரு பரந்த அளவிலாக தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய முற்போக்கான சிந்தனையும் தமிழ் மக்களுடைய அபிவிருத்தியை முக்கியமாக கருத்தில் கொண்டவர்களாகவும் அதேவேளையிலே தமிழ் மக்களுடைய உரிமைகள் தொடர்பாகவும் விடாப்பிடியாக குரல் எழுப்புவதாகவும் இருக்கக்கூடிய கட்சிகள் இரண்டு விடயத்திலும் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அதி தீவிரமான வசனங்கள் பேசுவது. பத்திரிகைகளுக்கு மட்டும் அறிக்கைகளை கொடுப்பது. அரசாங்கத்திற்கு எதிராக மேடைகளில் மட்டும் முழங்குவது என்று இல்லாமல் மக்களுக்கு நேரடியாக முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்ற வேலைத்திட்டங்களை ஏற்படுத்துவதாகவும் அது தொடர்பான கொள்கை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

அதேவேளையில் மக்களுடைய அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், தொடர்ச்சியாக குரல் கொடுப்பவர்களாக அதற்காக தேவைப்பட்டால் வீதியில் இறங்கி போராட கூடியவர்களாகவும் இருக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை முகம் கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தோடு தான் நாங்கள் ஐக்கிய முன்னணியை செயற்படுத்த வேண்டும்.

எவ்வாறாக இருந்தாலும் எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே தமிழர்கள் பிரதேசம் எங்கும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும்.

தனியாக போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் தனியாகவும் போட்டியிடுவோம். எனினும் நாங்கள் ஐக்கியத்தை விரும்புகிறோம்.

முற்போக்கான சக்திகளெல்லாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். தனித்தே போட்டியிட வேண்டி ஏற்பட்டாலும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி தமிழர்களுடைய பிரதேசம் எங்கும் வேட்பாளர்களை நிறுத்தி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்ற முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

அதற்கான செயல்பாடுகளில் மக்கள் மத்தியிலே இருக்கக்கூடிய பல்வேறு சமூக ரீதியான வெவ்வேறுப்பட்ட சக்திகள் அறிவாளிகள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகளுள் என்று பல்வேறு வகைபட்டவர்களோடும் நாங்கள் கலந்தாலோசித்து எவ்வாறு தேர்தலை எதிர்நோக்குவது என்கின்ற நடைமுறை விடயங்களை நாங்கள் தீர்மானிப்போம்.

தற்போது இராணுவ அதிகாரிகளையே உயர் பதவிகளை வகிப்பது காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக வடக்கு பகுதிகளிலே ஓய்வுப் பெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் நிர்வாக பகுதிகளிலே உயர் பதவிகளில் நிறுத்தியிருக்கிறார்கள். ஜனநாயக நாட்டில் அதாவது கூடுதலாக தமிழர் பிரதேசங்களிலே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கும்.

இது தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? என வினவிய போது, தமிழ் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்படுவது என்பது நியாயமானது தான்.

ஏனென்றால் இராணுவ அதிகாரிகளை நிர்வாகங்களில் போடுகிறார்கள். ஆனால் உலகத்தை பொறுத்தவரையில் எல்லா ஜனநாயக நாடுகளிலும் எங்களுக்கு பக்கத்தில் இருக்கிற இந்தியாவிலே போய் பார்த்தீர்கள் என்றாலும் கூட அவ்வாறே நியமித்திருக்கிறார்கள்.

அரசை பொறுத்தவரையில் இராணுவ அதிகாரிகள் மிகச்சிறந்த நிர்வாகிகள். ஏனென்றால் ஆயிரக்கணக்கானவர்களை கட்டி மேய்த்தவர்கள். அவர்கள் நிர்வாக திறமை கொண்டவர் என்று அரசு கருதுகிறது.

அந்தவகையில் தனிப்பட்ட வெறும் கம்பனிகளில் கூட இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவுடனே தன்னுடைய கம்பனிக்கு அழைத்து நிர்வாகத்தில் பொறுப்பு கொடுப்பது என்பது உலகம் முழுவதும் நடக்கிறது.

இங்குள்ள மக்களுடைய மனநிலையில் பிரச்சினை என்னவென்றால் கடந்த காலத்தில் யுத்த நிலைமையில் ஏற்பட்ட அந்த மனோபாவம். அதிலிருந்து இராணுவத்தை போடக்கூடாது என்ற எண்ணத்தை கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள். அந்த எண்ணத்தை அரசாங்கமும் கருத்திலெடுத்து செயல்பட வேண்டியது அவசியம்.

ஏனென்றால் ஜனாதிபதியே சொல்லியிருக்கார் தனக்கு வாக்கு போடாவிட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்களுடைய மனங்களை வெல்லுவதற்கு தான் முயற்சிப்பேன் என்று. அப்படி தமிழ் மக்களுடைய மனங்களை வெல்லுவதற்கு முயற்சிப்பதாக இருந்தால் இந்த இராணுவ அதிகாரிகளை இங்கு சிவில் நிர்வாகங்களிலோ அல்லது மக்களோடு நேரடியாக தொடர்புடைய விடயங்களிலோ நியமிப்பதை தவிர்த்து கொள்வது மிகநல்ல விடயம் என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.

அவ்வாறான சந்தர்ப்பங்கள் வருகின்ற பொழுது அரசாங்க தரப்பினருக்கு நாங்கள் எடுத்து கூற இருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் கோட்டாபயவிற்கு ஆதரவு அளிப்பது என்பது ஒரு கொள்கை ரீதியான வடிவமாகத்தான் எடுத்தோம். எந்த வகையிலும் அவர்களுடைய பங்குதாரர்கள் அல்ல நாங்கள். அவருடைய அணியைச் சேர்ந்தவர்களுமல்ல, நாங்கள் அவர்களுடைய கட்சியை சேர்ந்தவர்களுமல்ல.

எங்களை பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி என்பது மக்களை வெளிப்படையாக ஏமாற்றிக் கொண்டு வந்திருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கையிலே தான் ஐந்து வருடங்கள் ஐக்கிய தேசிய கட்சியினுடைய ஆட்சி இருந்தது. அப்பொழுது கூட எதுவுமே செய்யாமல் அப்பொழுது கூட அந்த ஐக்கிய தேசிய கட்சியை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதையுமே செய்யவில்லை என மேலும் தெரிவித்தார்.
Blogger இயக்குவது.