ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் ஜனாதிபதி திடீர் விஜயம் செய்யவேண்டும்- அர்ஜுன கோரிக்கை!

அரச நிறுவனங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கும் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


நுகேகொடையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மோசடிக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவ்வாறனவர்களே இதனை நிர்வகித்து வருவதால், கிரிக்கெட் சபைக்கு கிடைக்கும் நிதியை சூறையாடுகின்றனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்திறனிலுள்ள குறைபாட்டினால், நிதி மோசடி, ஊழல் போன்றவை இடம்பெற்று வருகிறன. இவ்வாறனவர்களிடமிருந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தையும், இலங்கை கிரிக்கெட்டையும் பாதுகாக்க வேண்டும்.

நிர்வாகத்தில் உள்ளவர்கள் தத்தமது கழகங்களில் விளையாடும் வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதால், திறமையான வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. இதனால், இலங்கை கிரிக்கெட் அணியும் அதளபாதாளத்துக்குள் வீழ்ந்துள்ளது.

எதிர்வரும் உலக இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிக்கு நாம் தகுதிச் சுற்றில் விளையாடியே பிரதான சுற்றுக்குள் நுழையவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மேலும், இலங்கை பாடசாலை கிரிக்கெட் அமைப்பிலும் பாரிய தவறு நிலவுகிறது. அதனையும் சரிசெய்ய வேண்டும். உதாரணத்துக்கு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 10ஆவது நிலையை அடைந்தது.

எம்மைக்காட்டிலும், கிரிக்கெட் விளையாடிய ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன. ஆகவே, எமது எதிர்கால கிரிக்கெட்டின் நிலை எவ்வாறு இருக்கப்போகின்றது? 19 வயதுக்குட்பட்ட அணித் தெரிவிலும் நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோருக்குத் தேவையான வீரர்களையே உள்ளடக்கியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பல நல்ல திட்டங்கள் உள்ளன. அவர் வித்தியாசமான கோணத்தில் செயற்பட்டு வருகிறார். அண்மைய காலங்களில் அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் திடீர் விஜயங்களை மேற்கொண்டு பரிசோதனை நடத்தியதுடன், பொது மக்களுடனும் உரையாடியிருந்தார். இவை வரவேற்றகத்தக்க விடயங்களாகும்.

அதுபோலவே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவத்துக்கும் சென்று நிலைமைகளை ஆராயுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.