பெண்களின் தற்காப்புக்காகத் தயாரான புதிய ரக செருப்பு!!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் இளைஞர் அமிர்த கணேஷ். பி.இ(எலக்ட்ரானிக் கம்யூனிகேசன்) படித்திருக்கும் இவர் விவசாயம், ராணுவம், மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் விஷவாயு தாக்குதல் உயிரிழப்புகளைத் தடுக்கும் கருவி உட்பட 600-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறார். தற்போது மூன்று கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளிலிருந்து அவர்களைக் காக்கக்கூடிய வகையில் சிறிய அளவிலான கருவி ஒன்றைக் கண்டுபிடித்து, அசத்தியிருக்கிறார்.


அமிர்த கணேஷிடம் பேசினோம். ``பொதுவெளியில் இன்றைக்குப் பெண்கள் ஏராளமான பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். தனியே நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பு போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. அத்துடன் பாலியல்ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் ஒயர்லெஸ் ரிசீவர், சிறிய அளவிலான பேட்டரி, எலக்ட்ரோடு ஆகியவற்றைக் கொண்டு சிறிய அளவில் புதிய கருவி ஒன்றை உருவாக்கி அதைக் காலணியின் அடிப்பகுதியில் பொருத்தியிருக்கிறோம்.


இந்தக் காலணிகளை அணிந்துகொண்டு வெளியே செல்லும் பெண்களுக்குப் பெருமளவில் உதவியாக இருக்கும். அதாவது இந்த வகையான செருப்பை அணிந்துகொண்டு செல்லும் பெண்களை யாரேனும் வேண்டாத நபர்கள் தொட்டாலோ அல்லது தூக்கினாலோ, நகைப் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ அந்தப் பெண்ணின் உடலில் ஏற்படும் வேகத்தினால் செருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி உடனடியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்போது, செருப்பிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை கேட்கும் அளவுக்கு எச்சரிக்கை செய்யும் வகையிலான அலாரம் ஒலிக்கும். அத்துடன், சம்பவத்தில் ஈடுபடும் எதிரியின் மேல் செருப்பை வைத்தால் அடிபாகத்திலிருந்து ஷாக் அடிக்கும் வகையில் இவை தயார் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆபத்துக்கு ஆளாகும் பெண்கள், அவர்களாகவோ அல்லது அலார சத்தத்தைக் கேட்டு மற்றவர்கள் உதவியுடனோ பிரச்னையிலிருந்து காக்கப்படுவார்கள். பேட்டரி மூலமே செருப்பில் பொருத்தபட்டுள்ள இந்தக் கருவி செயல்படுகிறது. அவற்றை அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய அவசியமில்லை. காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போதே ரீசார்ஜ் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை செல்போன், வாட்ச் போன்ற பொருள்களிலும் பொருத்தலாம். ஆனால், இவற்றையெல்லாம்கூட நாம் மறந்துவிட்டு வெளியே செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெளியில் செல்லும் செருப்பை அணிவதற்கு நாம் மறப்பது கிடையாது. மேலும், பெண்கள் தங்களுக்கு ஆபத்து என்றால் முதலில் காக்கும் கருவியாக செருப்பைத்தான் கையில் எடுப்பார்கள். அதனால்தான் செருப்பையே அவர்களின் பாதுகாப்புக்கான கருவியாக வடிவமைத்திருக்கிறோம்.

இந்தப் பணியில் மெக்கானிக்கல் பொறியியல் மாணவிகளான சங்கீதா, செளந்தர்யா, வினோதினி மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோருடன் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ளோம். நிச்சயமாக, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு இந்தச் செருப்பு முக்கியக் காரணியாக இருக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.

புதிய ரக செருப்பு கண்டுபிடிப்பு குறித்து நம்மிடம் பேசிய மாணவி சங்கீதா, `` எங்கள் கல்லூரிக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளைத் தாண்டித்தான் செல்ல வேண்டியுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள இந்த டாஸ்மாக் கடைகளில் மதுவை வாங்கும் குடிமகன்கள், சாலைகளில் அமர்ந்து குடிப்பதும் சண்டையிட்டுக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று ஒருவித அச்சத்துடனேயே கல்லூரிக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இதைப் பற்றி அமிர்த கணேஷ் சாரிடம் எடுத்துக் கூறினோம். அதற்கு அவர், ` பயப்படாதீங்க.. இதுபோன்ற ஒரு கருவியைக் கண்டுபிடித்து, நீங்கள் அணிந்துகொண்டு சென்றால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது' என அக்கறையாகக் கூறியதுடன், அதில் எங்களையும் இணைத்துக்கொண்டு இப்படியொரு செருப்பைக் கண்டுபிடித்தார். தற்போது இதை அணிந்துகொண்டு கல்லூரிக்குச் செல்ல இருக்கிறோம். இது ஒரு தொடக்கம் என்பதால் 5 ஜோடி செருப்புகளை மட்டுமே வாங்கி, அதன் அடிப்பகுதியில் கருவியைப் பொருத்தி புதிய வகையான காலணியை உருவாக்கியிருக்கிறோம்" என்றார் உற்சாகமான குரலில்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.