லவ்வர்ஸ் டே-க்கு மாஸ்டரின் குட்டிக் கதை!

விஜய் நடித்துவரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இருந்து ‘ஒரு குட்டி கத’ எனத் தொடங்கும் பாடல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவரும் இந்தப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வடமாநிலங்களில் ஆரம்பகட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது நெய்வேலி என்.எல்.சி சுரங்கப்பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
வருமான வரி சோதனை, அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு எதிர்ப்பு என்று விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையிலும் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளனர். படப்பிடிப்பு நடைபெறும் என்.எல்.சி சுரங்கப்பகுதியில் தொடர்ந்து ரசிகர்கள் குழுமி இருக்கும் நிலையில், தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை விஜய் நேற்று(பிப்ரவரி 10) தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார். இது குறித்த செய்தியை நமது மின்னம்பலத்தில், நொடிக்கு நூறு லைக்:மாஸ் காட்டிய செல்ஃபி! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்படும் என படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில், ‘என்ன நண்பா? ரெடியா’, ‘நம்ம ஆட்டத்த ஆரம்பிச்சிரலாமா? அப்டேட் காத்திருக்கிறது’ என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பதிவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் முன்னர் அறிவித்தது போன்றே, இன்று(பிப்ரவரி 11) மாலை 5 மணியளவில் அப்டேட் வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பில், மாஸ்டர் படத்தில் இடம்பெறும் ‘ஒரு குட்டிக் கத’ என்னும் பாடல் வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு பாடல் ரிலீசாகும் என்று கூறி ‘ஹேப்பியா’ என்றும் கேட்டு பதிவிட்டுள்ளனர்.
பொதுவாக விஜய் மேடைகளில் உரையாற்றும் போது, ‘ஒரு குட்டிக்கதை’ என்று கூறி சில மேற்கோள்களைக் காட்டிப் பேசுவார். அவரது பேச்சில் பிரபலமான ‘ஒரு குட்டிக் கத’ என்னும் விஷயம் பாடலாக வெளிவரவுள்ளதால் நிஜமாகவே விஜய் ரசிகர்கள் ‘ஹேப்பி’ ஆகி உள்ளனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.