ஜோசப் விஜய்: மதுரை போஸ்டரால் பரபரப்பு!
நடிகர் விஜய் தனது ரசிகர்களின் எண்ணிக்கையையும், அவர்களின் பலத்தையும் கொண்டு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் களத்திலும் சில அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறார். இந்த நிலையில் ‘விஜய் அரசியலுக்கு வரவேண்டும்’ என்பதைக் குறிப்பிட்டு மதுரை விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள சில போஸ்டர்கள் இணைய உலகில் கவனம் ஈர்த்துள்ளது. துணிச்சலான உள்ளடக்கமும், தைரியமான கண்டனங்களும் கொண்ட பல போஸ்டர்களை மதுரை மண்ணில் சாதாரணமாகவே பார்க்க முடியும். அந்த விதத்தில் விஜய்யைக் குறிப்பிட்டுள்ள இந்தப் போஸ்டர் பல சந்தேகங்களுக்கும், விவாதங்களுக்கும் ஆரம்பப்புள்ளி வைத்துள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார். வருமான வரித் துறை சோதனை, மாஸ்டர் படப்பிடிப்பு பிரச்னை என்று தொடர்ந்து விஜய்க்கு நெருக்கம் தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனக்கு இருக்கும் மக்கள் பலத்தைக் குறிப்பிடும் விதமாக பெரும் ரசிகக் கூட்டத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை விஜய் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்துதான் இத்தகைய போஸ்டர்கள் மதுரை மண்ணில் ஒட்டப்பட்டுள்ளது.
விஜய்யின் புகைப்படத்தை வைத்து, உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் என்ற திருக்குறளைக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் “ஒருவன் தன் உள்ளம் அறியப்பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்” என்று அதன் பொருளையும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரை, மதுரை மாவட்ட தளபதி விஜய் தலைமை மக்கள் இயக்கத்தின் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட பொருளாளருமான என்.சதீஸ்குமார் வெளியிட்டுள்ளார்.
அதே போன்று ‘மதுரை மத்திய தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சாப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள், மாஸ்டர் ஜோசப் விஜய்” என்று எழுதப்பட்டுள்ளது. அதில் விஜய்யிடம் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், இன்றைய இந்திய அரசியலில் மிகவும் கவனிக்கத்தக்க நபராக மாறியுள்ள அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் இடம்பெற்றுள்ளனர்.
நடிகர் விஜய்யின் முழுப்பெயரான ‘ஜோசப் விஜய்’ என்பதே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் அதைக் குறிப்பிட்டே இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘இப்படி ஒரு முதல்வர் எங்கள் மாநிலத்துக்கு வரமாட்டாரா’ என்று பல மாநில மக்களையும் தனது நலத்திட்டங்களால் ஏங்க வைத்தவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அதே போன்று, இன்று பல மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு தனது ஆலோசனைகளை வழங்கி வருபவர் பிரசாந்த் கிஷோர். அவரது ஆலோசனைகளின் தாக்கம் இன்று(பிப்ரவரி 11) வெளியாகியுள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இவர்கள் இருவரையும் குறிப்பிட்டு விஜய்யின் போஸ்டரை தயார் செய்திருப்பதால் தமிழக முதல்வராக விஜய் மாற வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை வெளிப்படையாகத் தெரிகிறது. தனது திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கூர்மையான அரசியல் கருத்துக்களைப் பேசிவரும் விஜய், மதுரை ரசிகர்களின் ஆசைக்கு ரியாக்ட் செய்கிறாரா என்பது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தெரியவரும்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா