வாய்ப்பிருந்தும் கொட்டாத மழை!
தேனி மாவட்டம் சின்னமனூர் கிராமத்தில் வசிக்கும் வேல்சாமி(பாலாஜி சக்திவேல்), போஸ் காளை(சரத்குமார்) ஆகியோர் அண்ணன்-தம்பிகள். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் அண்ணனை எதிர்கட்சிக்காரர்கள் வெட்டிவிட, கோபத்தில் போஸ் அவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குச் செல்கிறார்.
அவரது மனைவி சந்திரா(ராதிகா), அதே ஊரில் வசித்தால் தன் பிள்ளை முரடனாக வளருமென மகனையும், மகளையும் அழைத்துக் கொண்டு சென்னையில் குடியேறுகிறார்.
பிள்ளைகள்(விக்ரம் பிரபு-ஐஸ்வர்யா) வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.
கோயம்பேட்டில் வாழை மண்டி தொழில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாய் பிள்ளைகள் முன்னேறி வருகின்ற சமயத்தில், 16 வருட சிறை வாசம் முடித்த போஸ் விடுதலையாகிறார். பாசத்தோடு வரும் தந்தையை பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். தொழில், தனிப்பட்ட வாழ்க்கை என பிள்ளைகளுக்கு எல்லாவிதத்திலும் முட்டுக்கட்டையாய் இருக்கிறார் போஸ். அதே சமயம், போஸ் வெட்டிக் கொன்ற எதிர்கட்சிக்காரரின் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரான நட்ராஜ்(நந்தா) பழிவாங்குவதற்காக தயாராகிறார். போஸ் தன் பிள்ளைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? பழிவாங்க காத்திருக்கும் நட்ராஜிடமிருந்து தப்பினாரா?
இப்படி பல கேள்விகளுக்கு விடையளிக்க முயற்சித்திருக்கிறது திரைக்கதை.
‘தேவர் மகன்’ கமல் ஜெயிலுக்குச் சென்று வந்து ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் உருவான புள்ளிதான் இப்படத்திற்கான கதையை கட்டமைத்திருக்க முடியும் எனத் தோன்றுகிறது. ஆத்திரத்தால் கத்தி எடுத்துவிட்டு பின்னர் வாழ்க்கை முழுவதும் அதன் ரணத்தை சுமக்கும் ஒரு குடும்பத்தின் கதையாக இப்படத்தைப் பார்க்கலாம். ஒரு பக்கம் நல்ல கதையிருந்தும், மறுபக்கம் வழக்கமான திரைக்கதை பாணி, தேவையற்ற முடிச்சுகள், கதைக்கு தேவையில்லாத பகட்டான திரைமொழி ஆகியவை இப்படத்தின் அசல் வில்லன்களாக மாறியிருக்கின்றன.
அட்டகாசமான நடிகர்கள் தேர்வு
சரத்குமார் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நியாயப்படுத்தியிருக்கிறார். மனைவி பிள்ளைகளைப் பார்க்க முடியாமல் ஜெயிலில் தவிப்பது, வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுடன் ஒட்ட முடியாமல் திண்டாடுவது, தலைமுறை இடைவெளியில் அல்லாடுவது என தன் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்.
வண்டிச்சக்கரத்திற்கு அச்சாணி போல, இக்கதைக்கு ராதிகா. கணவன் இல்லாமல் குடும்பத்தை நடத்தப் போராடுவது, பிள்ளைகள் முன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசுவது, ஒரு பக்கம் கணவன் மறுபக்கம் பிள்ளைகள் என நடுவில் மாட்டிக்கொண்டு நிற்கதியாய் நிற்பது என மனுஷி மனதில் நிறைகிறார்.
அண்ணனாக வரும் பாலாஜி சக்திவேல், ஊர்க்காரரை கண்முன் கொண்டு வருகிறார். ஊருக்கு போக பஸ் ஏறும்முன் அவசர அவசரமாக சரக்கடிப்பது, ‘நான் தான் அவனை ஜெயிலுக்கு அனுப்பினேன், நானே அவனை கூப்பிட்டு வரேன்’ என குற்ற உணர்ச்சிக்கு பிராயச்சித்தம் தேடுவது என கதாபாத்திரத்திற்கு இயல்பாக வலு சேர்த்திருக்கிறார்.
சரத்குமாரின் அம்மாவாக வரும் அந்தப் பாட்டியின் கதாபாத்திரம் இயல்பு. கருப்பசாமிக்கு படையல் வைக்காத குறைதான் குடும்பத்தை இன்னும் அலைக்கழிக்கிறதென பஸ் ஸ்டாண்டில் அவர் பேசும் காட்சி நம் எல்லோரது பாட்டியையும் நியாபகப்படுத்துகிறது.
சமநிலையற்ற பாத்திரப்படைப்புகள்
மறுபுறம் அடுத்த தலைமுறைக்கான கதாபாத்திர வடிவமைப்பு தடுமாறுகிறது. நடிகர்களாக தங்கள் பாத்திரத்தை விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா, சாந்தனு, நந்தா, மடோனா என எல்லோரும் சரியாக செய்தாலும் எந்தப் பாத்திரமும் மனதில் ஒட்டாமல் இருக்கிறது. எல்லோரும் ஒரே வசனத்தை பேசுவது போல தட்டையாக இருக்கின்றது. ஒரு புறம் வலுவான கதை மாந்தர்கள், மறுபுறம் வலுவற்ற செயற்கைத்தனம் நிரம்பிய கதை மாந்தர்கள் என படம் சமநிலையற்று காட்சிகளாக இல்லாமல் வெறும் சம்பவங்களாகவே கடந்து செல்கிறது. எந்தக் காட்சியையும் மனதில் நிற்கவைக்காமல் கேமரா அடுத்தடுத்த இடங்களுக்கு பாய்கிறது.
ஓவர் மணிரத்னம் ‘டச்’
ஏன் பிள்ளைகள் அப்பாவை வெறுக்கிறார்கள் என்பதற்கு வலுவான காரணங்கள் திரைக்கதையில் இல்லாததால், எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் முக்கியமான காட்சிகள் கூட சாதாரணமாக நகர்கிறது. படத்தின் முரணே அதுதான் எனும் போது, ஏன் இயக்குநர் அதற்கு கவனம் செலுத்தவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
சிறைவாசம் முடித்து முதன்முதலாக சரத்குமாரும், ராதிகாவும் சந்திக்கும் போது, இயல்பாகவே கனம் கூடி விடுகிறது. அப்போதும் விடாமல் கொடுக்கப்பட்ட வசனம் காட்சிக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது. இதுதான் கதை என தெரிந்த பின்பும், பின்னடைவுடனே பயணிக்கிறது திரைக்கதை. கதாநாயகன் வில்லன் என்ற இரு துருவங்கள் இல்லாமல், அப்பா பிள்ளைகளுக்கான முரணே இந்தக் குடும்பக் கதைக்கு போதுமானதாக இருந்திருக்க முடியும். இன்னமும் ஏன் தமிழ் சினிமா வில்லன்களை நம்பியே கதையை நகர்த்துகின்றன? ஒரு அழகான ‘பேமிலி டிராமா’ ஜானர், ஒவ்வொரு பேருந்தாக மாறி பல ஜானர்களுக்குள் சென்று, தான் செல்ல வேண்டிய ஊருக்கு மெல்ல பயணிக்கிறது.
கிராமத்தில் இயக்குநரின் லென்ஸூடன் துவங்கும் திரைப்படம், நகரத்திற்கு வந்ததும் மணிரத்னம் தன் படங்களில் மிடில்-கிளாஸை எப்படிப் பார்ப்பாரோ அப்படியே தனது லென்ஸையும் கழட்டி மாட்டிக் கொள்கிறது. அடிதடியான அண்ணன், வாயாடி தங்கச்சி, அபத்தமான வசனங்கள், மேம்போக்காகவே அனைத்தையும் தொட்டுச் செல்வது, திணிக்கப்பட்ட நெல்லை பாஷை, அவர்களுக்காகவே(பிரதான பாத்திரங்கள்) அனைத்துமே இயங்குவது போல காட்சிகளை வடிவமைத்திருப்பது என மணிரத்னம் நெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது. மணிரத்னத்தின் இதற்கு முந்தைய பல படங்களின் தாக்கம் எந்த உருமாற்றமுமின்றி அப்படியே வந்திருக்கிறது இதில். தனக்கான திரைமொழியை இயக்குநர் தனா தேர்வு செய்யவேண்டியது மிக அவசியம்.
அதே சமயம், ஏன் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒன்றாக அறியப்படும் மணிரத்னத்தின் பட்டறையில் இருந்து, சொல்லிக்கொள்ளும்படியான ஒரு படைப்பாளியை தமிழ் சினிமா இன்னமும் பெறவில்லை என்ற கேள்வியும் விடாமல் எழுகிறது.
ஒளிப்பதிவு செய்திருப்பவர் ப்ரீதா ஜெயராமன். காட்சிகளுக்கு தேவையான வண்ணங்களையும், ஒளி மற்றும் நிழலையும் அழகாக கொடுத்திருக்கிறார். ட்ரோன் காட்சிகள் மட்டும் அதிகப்படியாக தெரிகிறது. கோயம்பேடு, தேனி, ஆந்திரா, பெங்களூர் என பல இடங்களுக்கு காட்சிகள் மாறினாலும் வெறும் அழகியலாக மட்டுமே அவை நிற்பது உறுத்தல். படத்தொகுப்பில்(சங்கத்தமிழன்.இ) இன்னும் அதிகப்படியான கவனம் செலுத்தியிருக்கலாம். எந்த விதமான ஏற்ற இறக்கமும் இல்லாமல் ஒரே விதமாக பயணிப்பது பலவீனம். சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் படத்தோடு பயணிப்பது ஆறுதலாக இருந்தாலும், தொடர்ந்து பாடல்களால் காட்சிகளை நிரப்பிக் கொண்டே இருப்பது அலுப்பாக இருக்கின்றது. பல இடங்களில் இசை ஆல்பத்தை பார்ப்பதைப் போலவே எண்ணம் ஏற்படுகிறது. பின்னணி இசைக்கும், மெளனத்திற்கும் இடமளித்திருந்தால் இன்னும் பார்வையாளனுக்கான இடமும் இருந்திருக்கும்.
பல சறுக்கல்கள் இருந்தாலும், ஆச்சர்யமாக அமைந்த நடிகர்களின் பங்களிப்பு, எல்லோரும் கேட்ட, பார்த்த வாழ்க்கையை நினைவு படுத்துவது என கதையின் ஈரம் நம்மை அமர வைக்கிறது. வானம் கொட்டட்டும் - சரத்குமார், ராதிகா, பாலாஜி சக்திவேல் ஆகியோரது தேர்ந்த நடிப்பும், அவர்களது கதாபாத்திரமும் குறைகள் இருந்தாலும் படத்தைக் காப்பாற்ற முயல்கிறது. ஒரு நல்ல படத்திற்கான அனைத்து வாய்ப்பிருந்தும், வானம் மேக மூட்டத்துடனே காணப்படுகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கியிருக்கிறார். சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு பாக்யராஜ், நந்தா, அமிதாஷ், பாலாஜி சக்திவேல், மதுசூதன ராவ் என பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்து: மணிரத்னம் - தனா; இசை: சித் ஸ்ரீராம்; ஒளிப்பதிவு: ப்ரீதா ஜெயராமன்; படத்தொகுப்பு: சங்கத்தமிழன்.இ; கலை இயக்கம்: கதிர்
-முகேஷ் சுப்பிரமணியம்