பழிக்குப் பழி: இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், வெற்றிபெற்று நியூசிலாந்து அணி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது. இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் தாங்கள் சந்தித்த தோல்விக்கு நியூசிலாந்து பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, மவுண்ட் மவுங்கானுவில் இன்று(பிப்ரவரி 11) நடைபெற்றது. டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப்போட்டியின் ஆரம்பகட்ட நிலவரங்களை, நமது மின்னம்பலத்தில் இந்தியாவின் ஆக்ஷனும், நியூசிலாந்தின் ரியாக்ஷனும்! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது. தொடர்ந்து 297 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. விறுவிறுப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில், 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்திய வீரர்களைப் பொறுத்தவரையில், கே.எல்.ராகுல் மிகச்சிறப்பாக விளையாடி 112 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4-ஆவது சதத்தை அவர் பதிவு செய்தார். மேலும் இந்தியாவின் ஷ்ரேயஸ் அய்யர் 62 ரன்களும், மணிஷ் பாண்டே 42 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணியில் முதலில் களமிறங்கிய கப்டில் மற்றும் நிக்கோலஸ் இணைந்து 106 ரன்களைக் குவித்தனர். தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்சன் 22 ரன்களும், டெய்லர் 12 ரன்களும், அரைசதம் அடித்த நிக்கோலஸ் 80 ரன்களும் எடுத்திருந்தனர்.
45-ஆவது ஓவர் முடிவில் 273 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து அணியில், 46-ஆவது ஓவரில் விளையாடிய கிராண்ட் ஹோம், ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார். தொடர்ந்து 47-ஆவது ஓவர் முதல் பந்தில் கிராண்ட் ஹோம் அடித்த ஃபோரின் மூலம், 300 ரன்களைக் குவித்த நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அனைத்துப் ஆட்டங்களிலும் வென்ற இந்திய அணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. அதற்கு பதில் கூறும் விதமாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து இந்தியாவை தோல்வியுற வைத்துள்ளது.
-இரா.பி.சுமி கிருஷ்ணா