விஜய் படக் காப்பியா? ஆஸ்கருக்கு எதிராக தமிழ் தயாரிப்பாளர்!

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த திரைப்படமாக ‘பாரசைட்’ என்னும் கொரியன் மொழித் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தப்படத்திற்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ஆஸ்கர் விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. அனைவரையும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய சிறந்த திரைப்படத்திற்கான விருதை போங் ஜூன் ஹோ என்னும் கொரிய மொழி இயக்குநர் பெற்றிருந்தார். அவரது இயக்கத்தில் வெளிவந்த பாரசைட் திரைப்படம், சிறந்த திரைப்படம், சிறந்த அயல்மொழித் திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்து உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 92-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் அனைவரையும் ஈர்த்த இந்தத் திரைப்படம் சர்வதேச அளவில் பலராலும் கொண்டாடப் பட்டு வருகிறது.

உலகமே இந்தப்படத்தைக் கொண்டாடி மகிழ்ந்தாலும், தமிழகத்தில் மட்டும் பலராலும் கிண்டல் செய்யப் பட்டது. அதற்கு முக்கியக் காரணம் படத்தின் கதை. வறுமையின் காரணமாக, ஒரு பணக்கார வீட்டில் பொய் கூறி இளைஞன் ஒருவன் வேலைக்கு சேர்கிறான். அவனுக்கு அந்த வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் மீது காதல் ஏற்படுகிறது. தொடர்ந்து பல பொய்களைக் கூறி தனது குடும்ப உறுப்பினர்களை அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்துகிறார். இது அவர்களுக்குத் தொடர்ந்து பல சிக்கல்களைத் தருகிறது. இதுதான் பாரசைட் திரைப்படத்தின் மையக்கரு.

இந்தக் கதை 1999-ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான

மின்சார கண்ணா திரைப்படத்தின் அப்பட்டமான தழுவல் என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. வெறும் மீம்களாவும், சமூக வலைதளப்பதிவுகளாகவும் வலம் வந்த இந்த விஷயம் தற்போது சீரியஸான வழியில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் கூறும்போது, ‘இப்படியான ஒரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே தேர்வு செய்ததை நினைத்து மகிழ்கிறேன். படத்தின் உரிமை தயாரிப்பாளர் தேனப்பனிடம் உள்ளது. அவரால் மட்டுமே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறும்போது, “இது ஒரு வெளிநாட்டு விவகாரம் என்பதால், அதற்கு உரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இது தொடர்பான தகவலை விரைவில் தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தி குயிண்ட் ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தத் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ள நிலையில், ஆஸ்கர் வென்ற திரைப்படத்திற்கு எதிராக தமிழ் சினிமா சட்ட ரீதியாகக் களமிறங்குமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.