கொரோனா: மக்களை மிரட்டும் சீன அரசு!

சீனாவின் வுகான் நகரில் தொடங்கி பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். வுகானிலிருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டு நோய் பரவல் தடுக்கப்படுகிறது எனவும், 10 நாட்களில் பெரிய மருத்துவமனையைக் கட்டி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் சீன அரசு அதன் சார்பு ஊடகங்களில் மார் தட்டிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் சீனாவில் நடைபெறும் பல அதிகார அடக்குமுறைகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.


பொதுவாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடுதான் சீனா. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பின் உண்மை நிலை உலகுக்கு தெரிந்துவிடக்கூடாது என மேலும் தனது இரும்பு கரங்களை நெருக்கத் துவங்கியிருக்கிறது. அந்தவகையில் உண்மை நிலையை உலகிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் அங்கு நடப்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இருவர் காணமல் போயுள்ளனர்.

ஃபேங் பின் மற்றும் சென் க்யுஷி எனும் பெயர் கொண்ட அந்த இரு வீடியோ பத்திரிகையாளர்களும், வுகானில் நடக்கும் நிகழ்வுகளை, தங்களுக்குத் தெரிந்த தகவலை உலகோடு பகிர்ந்துகொள்ள முயன்றனர். சுய தொழில் செய்து வரும் ஃபேங் பின் பிப்ரவரி 1 அன்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 8 பேரின் உடல்களை ஒரு சிறிய வாகனத்தில் குவித்து எடுத்து சென்ற காட்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டார். அது மக்களிடையே அதிகம் பரவியது. அதன் பிறகு காவல் துறையினர் அவரை எச்சரித்திருக்கின்றனர். பிப்ரவரி 9ஆம் தேதி மீண்டும் அவர் ஒரு வீடியோவை பதிவேற்ற அதன் பிறகு, இதுவரை எந்த பதிவும் வெளியாகவில்லை. அவர் என்ன ஆனார் என்பது தொடர்பான தகவலும் இல்லை.

சென் க்யுஷி கொரோனா பாதிப்பிற்கு முன்பிருந்தே பிரபல வலைதள பத்திரிக்கையாளர், ஹாங்காங் போராட்டத்தை, தொடர்ந்து வெளியிட்டு வந்ததால் அவரை பலர் சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வந்தனர். தற்போது அவரது பக்கங்களை, சீன அரசாங்கம் முடக்கியும் அவரது பதிவுகளை பகிர்பவர்களின் பக்கங்களை முடக்கியும் வந்தது. தற்போது அவரும் காணாமல் போயுள்ளார். இந்த தகவலை அவரது நண்பரின் வலைதள பக்கம் மூலம் சென் க்யுஷின் தாயார் உறுதி செய்துள்ளார்.

இதற்கு முன்பு புதிதாக ஒரு வைரஸ் பரவுவதாக கண்டறிந்து மற்ற மருத்துவர்களுக்கு எச்சரிக்கை செய்ய முயன்ற மருத்துவர் லீ, இதுபோல் அதிகாரிகளால் மிரட்டப்பட்டு பின்னர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இதுபோன்ற ஆபத்தான காலங்களில் உண்மையை சொல்பவர்களை மிரட்டும் மனோபாவம், இத்தனை பாடங்கள் கற்றும் மாறவில்லை என்பது தான் சோகமான உண்மை. பிப்ரவரி 13ஆம் தேதி மட்டும் 123 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இத்துடன் சீனாவில் வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 1488 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
Blogger இயக்குவது.