காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!

பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.


பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும் தமிழகத்தின் கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியைச் சேர்ந்த கவுதமராஜிற்கு மறக்க முடியாத சோகத்தினை ஏற்படுத்தியநாளாக அமைந்து விட்டது கடந்த 2019, பிப்ரவரி 14.

பெங்களூருவில் இன்ஜினீயராக பணியாற்றி வரும் கவுதமராஜிற்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த கோகிலாவிற்கும், 2018 மே மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணமான பின்னர் காதலிக்கத் தொடங்கிய இந்த தம்பதியின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியின் அர்த்தமாக கோகிலா கர்ப்பமானார். கோகிலா ஒரு குழந்தைக்குத் தாயாகப் போவதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அவர்கள் வாழ்வில் நீடிக்கவில்லை.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் திடீரென கோகிலாவின் உடல் எடை குறையத் தொடங்கிய நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் எடைக் குறைவு கோகிலாவின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து , வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்தவருடம் பெப்ரவரி 4 ஆம் திகதி கோகிலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த கோகிலாவுக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவக் குழுவினர், 7 ஆம் திகதி உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

கோகிலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. எனினும் குழந்தையின் எடை இரண்டு கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் குழந்தையும் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. குழந்தையை வெளியே எடுத்த பின்னரும் கோகிலா சுயநினைவின்றி இருந்ததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர். இந்த நிலையில் தான் கோகிலா குடும்பத்தினர் மற்றும் கவுதம்ராஜ் தலையில் இடியாய் வந்து விழுந்தது மருத்துவர்கள் சொன்ன தகவல். பிப்ரவரி 14ம் தேதி கோகிலாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. செய்வதறியாது கவுதமராஜ் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

எனினும் மனைவியின் இந்த நிலையை நினைத்து துக்கத்திலும் துணிவான ஒரு முடிவை எடுத்தார் கவுதமராஜ். எப்போதுமே நம்மால் முடிந்தவற்றை பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என அடிக்கடி கணவரிடம் கூறிவந்துள்ளார் கோகிலா. இதனால் காதல் மனைவியின் விருப்பம்போலவே அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தார் கவுதமராஜ்.

கோகிலா யாருக்குமே கஷ்டம் கொடுக்க நினைத்ததில்லை, நம்மால் முடிந்த 1 ரூபாயோ 2 ரூபாயோ கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வா, இன்னைக்கு அவள் உடல் முழுவதையுமே தானமாக கொடுத்திருக்கிறாள். இதயம், கணையம், நுரையீரல், கல்லீரல், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டுள்ளது. ”என்னைப் பொறுத்தவரையில் கோகிலா இறக்கவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

காதலர் தினமான இன்று எனக்கு அவளின் இதயத்தில் வாழத் தகுதி இல்லை கோகிலாவின் இதயம் வேறு எங்கேயோ துடித்துக் கொண்டிருக்கிறது.” என்று கண்ணீர் வடிக்கிறார் கவுதமராஜ்.
Powered by Blogger.