கற்கால மனிதர்களின் எச்சங்களைச் சேகரித்த சென்னை மாணவர்கள்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்துள்ள செந்தூர்மலையில், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய எச்சங்கள் குறித்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறைத்தலைவர் சௌந்தரராஜன், அகழாய்வு பொறுப்பாளர் ஜினு கோஷி தலைமையில் மாணவ, மாணவிகள் 21 பேர் கடந்த 3-ம் தேதி முதல் அறிவியல் வழிமுறைகளைப் பின்பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.


இந்த அகழாய்வில் சங்ககால பொருள்களும் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருள்களும் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, கர்நாடக மற்றும் ஆந்திராவில் மட்டுமே இதுவரை அதிகமாகக் காணப்பட்ட `சாம்பல் மேடுகள்’ செந்தூர்மலையில் இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அகழாய்வு மாணவர்கள், ``செந்தூர் மலையில் புதிய கற்காலம், சங்ககால பொருள்கள் தரைமட்டத்தில் கிடைத்துள்ளதாக 10 ஆண்டுகளுக்கு முன் மத்திய தொல்லியல்துறை அறிக்கை வெளியிட்டது. இந்தப் பகுதி அகழாய்வுக்கான ஆக்கப்பூர்வமான இடம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

நாங்கள், மூன்று வாரங்களாக செந்தூர்மலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். புதிய கற்கால மனிதர்கள் ஈமச் சடங்குகளை நடத்தியதற்கான எச்சங்களையும் சேகரித்துள்ளோம்.

சிவப்பு, கருப்பு நிறமுடைய பானை ஓடுகள், விலங்குகளின் எலும்புகள், இரும்புக் கழிவுகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கற்கருவிகளில் உள்ள கிறுக்கல்களில் `பிராமி’ எழுத்துகள் தெரிகின்றன. நாளை சென்னை திரும்புகிறோம்.


இங்கு கிடைத்த பொருள்களை ஆய்வுக்கு அனுப்பி அதன் காலத்தைக் கணக்கிட உள்ளோம். எங்களுக்கு இந்த அகழாய்வு மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் அமைந்துள்ளது. பல்வேறு கல்லூரி மாணவர்களும் கிராம மக்களும் நேரில் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டுச் செல்கிறார்கள்’’ என்றனர் பெருமிதத்துடன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.