வவுனியா ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயற்பட்ட சார்ள்ஸ் எம்.பி

வவுனியா ஊடகவியலாளர்கள் யுத்த காலத்தில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து தமது தொழிலை மேம்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு புதிய அரசினால் வழங்கப்படவிருந்த சலுகைகளை வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தடுத்து நிறுத்த முற்பட்ட சம்பவம் வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் நேற்று இடம்பெற்றது.


அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்கும் செயற்றிட்டத்தின் அடிப்படையில் வவுனியா ஊடகவியலாளர்கள் தமக்கான வீட்டுத்திட்டத்திற்கான காணியை அடையாளப்படுத்தி கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி செயலகம் வரை கடிதங்களை அனுப்பப்பட்டு காணி தொடர்பான திணைக்களங்களும் காணியை வழங்க அனுமதி வழங்கப்பட்டு குறித்த காணியை முறையாக பெற்றிருந்தனர்.

இதன் நிமிர்த்தம் தற்போதைய அரசும் ஊடகவியலாளர்கள் யுத்தப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு குறித்த காணியை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன் வனஜீவராசிகள் மற்றும் வனவள இராஜாங்க அமைச்சர் வவுனியாவில் நடத்திய கூட்டத்திலும் குறித்த காணியை ஊடகவியலாளர்களுக்கு வழங்க முடியும் என வன வளத்திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஊடகவியலாளர்கள் குறித்த காணியில் துப்பரவு வேலைகளை செய்திருந்தனர்.

இந்நிலையில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட காணியை வழங்க கூடாது எனவும் அவர்களுக்கு காணி வழங்குவதாயின் ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்டத்தில் அரச உத்தியோகத்தர்கள் குடியிருப்புகளுக்கு பின்புறமாக வழங்குமாறும் கூறி தடுத்துள்ளார்.

இதன்போது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணியை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பல தடவைகள் கூறிய போதிலும் தமிழரசுக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணியை வழங்காது தடுத்தமை தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் விசனம் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் சீராக கலந்து கொள்ளாத குறித்த சாள்ஸ் எம்.பி நேற்றைய தினம் தனக்கு சார்பான அரச உத்தியோகத்தர் ஒருவரின்  தூண்டுதலின் அடிப்படையிலேயே மன்னாரில் இருந்து வந்து வவுனியாவில் வசிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தமது மாவட்டம் தொடர்பில் கூறிய கருத்துக்களை புறந்தள்ளி செயற்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Blogger இயக்குவது.