என்று தீருமோ..??இந்த வேதனை?? - உரையாடல்!!

பரபரப்பான இயங்கிக்கொண்டிருந்த்து அந்த பத்திரிகை அலுவலகம். மதியஉணவு  பொதியோடு வந்த ஆதிரை, செய்திப்பிரிவு பணியாளரான கயல்விழி யோசனையோடு அமர்ந்திருந்த்தைக்கண்டதும் அருகில் வந்து பேசத்தொடங்க.......அந்த உரையாடல் .....இதோ.......

ஆதிரை :  என்ன கயல்விழி, தனிய இருந்து என்னத்தை யோசிக்கிறாய்?


கயல்விழி : என்னக்கா இப்பிடி கேக்கிறியள்? யோசிக்கிறதுக்கே விசயமில்லை, நாட்டை நினைச்சாலும் யோசினைதான், வீட்டை நினைச்சாலும் யோசினைதான்.


ஆதிரை : நீ சொல்லுறது சரிதான்....இப்ப நீ எதைப்பற்றி யோசிக்கிறாய்?


கயல்விழி : நாடு போற போக்கை பற்றித்தான் அக்கா.


ஆதிரை : ஓமடி......விடிஞ்சா பேப்பரில பாக்கிற ஒவ்வொரு செய்தியும் நெஞ்சில நெருப்பைதானே கொட்டுது.


கயல்விழி : ஓமக்கா, அடிதடியும் அரசியலும், வல்லுறவும் வெடிகுண்டு மீட்பும், சாதிச்சண்டையும் சமயச்சண்டையும், கொலையும் கொள்ளையும், கைதும் கலவரமும் எண்டுதானே செய்திகள் வருகுது.


ஆதிரை : இனவாதம் தலைவிரிச்சாடுற ஒரு தேசத்தில இதைவிட வேற என்ன செய்திகள் வருமெண்டு நினைக்கிறாய்?


கயல்விழி : அது சரிதான் அக்கா, எங்கட சனமும் செய்யிற வேலையள் சரியே, பெடியள் ஒருபக்கம் பகிடிவதை, வாள்வெட்டு எண்டு அலைய, பெருசுகள் ஒருபக்கம் கட்சி ஆரம்பிக்கிறம், உண்ணாவிரதம் இருக்கிறம் எண்டு .......


ஆதிரை :  அதுசரி, போன் வழிய கண்டதையும் பாக்கிற வசதி, பாத்திட்டு பெடியள் படுறபாடு, பொம்பிளைச் சகோதரத்தோட கூடப்பிறக்காத மாதிரி, இன்னொரு பொம்பிளைப் பிள்ளையின்ர மானத்தை காவுவாங்குதுகள்......


கயல்விழி : உதையெல்லாம் எப்பிடி திருத்தப்போறமோ தெரியேல்ல, இப்பிடியே போனா தமிழருக்கு எண்டு இருக்கிற அடையாளம் அழிஞ்சுபோடும்.

ஆதிரை : உண்மைதான் இந்த பிஞ்சுகள் வாழத்தானே அத்தனை உறவுகள் தங்களை உயிர்ப்பலி கொடுத்ததுகள்.....


கயல்விழி : அந்த துன்பம் ஒருபக்கம் எண்டால் முழத்துக்கு முழம் கட்சி தொடங்குற எங்கடை சனத்தை என்ன சொல்லி திட்ட?


ஆதிரை : உந்த விசயத்தில எங்கட சனம் வெறும் அம்புதான், எய்யிறது லாபம் தேடுறவைதானே.....


கயல்விழி : தாங்கள் அம்புகளா எய்யப்படுறம் எண்டு சனத்துக்கு விளங்கிறேல்லையே,


ஆதிரை : விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறதில எங்கட சனம் வலு கெட்டி.


கயல்விழி : தமிழ் மக்களின்ர வாக்குப் பலத்தை உடைக்கவேணும் எண்டு நினைச்சு, ஆட்டுவிக்க, நாங்களும் நல்லா ஆடுறம்.


ஆதிரை : அதுசரி, ஒருபக்கம் அரசியல் எண்டால், இன்னொரு பக்கம் மதவாதம்.  இனஉரிமை போகுது, அதைப்பற்றி யோசிக்கவேண்டியவையள் மதச்சண்டை பிடிச்சு ஒற்றுமையை உடைக்கப்பாக்கினம்.


கயல்விழி : ஓமக்கா, உந்த சண்டைக்காலமெல்லாம் இந்தியாவில சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட்டு, இப்ப வந்து....


ஆதிரை :  அவையளா வரயில்லை, அதுவும் திட்டம் போட்டு அனுப்பப்பட்டது தான்..... அனுப்பினவையளுக்கு மனசு குளிருற மாதிரி நடக்கத்தானே வேணும், அதுக்கு சமயம் பாத்து காத்திருக்கிறது, சின்னதா ஒரு பொறி கிடைச்சால் காணும்தானே, உடனே ஊதி பெரிசாக்கி. உண்ணாவிரதம், உணவு தவிர்ப்பு எண்டு சனத்தை ஏமாத்தவேண்டியது.


கயல்விழி : உந்த விசயத்தில  எங்கட பெடியள் வலுஉசார், உந்த விளையாட்டை பெடியள் அக்குவேற, ஆணிவேறயா அலசி ஆராய்ஞ்சு முகநூலில போட்டு கிழிச்சிட்டாங்கள் ......


ஆதிரை : அதோடதான் அப்பிடியே அந்த விசயம் அடங்கிப்போட்டுது போல......

கயல்விழி : ஓமக்கா, கடைசியில ஏமாந்தது அவையள் தான்......


ஆதிரை : தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒருபோதும் சாத்தியமில்லை, இலங்கை பெரும்பான்மை அரசு எங்கட உரிமையை எங்கட கையில தூக்கி தருமெண்டு நினைக்கவே கூடாது.


கயல்விழி : ஓமக்கா....... சின்னாபின்னப்பட்ட சிறுபான்மை இனமாகத்தான் வாழவேணும் போல......


ஆதிரை : காலம்தான் பதில் சொல்லவேணும்.


கயல்விழி : சரியக்கா வாங்கோ சாப்பிடுவம், கதைச்சுக்கொண்டு இருந்ததில நேரம் போனதே தெரியேல்ல.......


மனஆதங்கத்தை கொட்டிய நிறைவில் இருவரும் சேர்ந்து நடந்தனர். 


தமிழரசி 






Blogger இயக்குவது.