கொரோனா தொற்று - வடகொரிய அதிபரின் அதிரடி உத்தரவு!!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடானா சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் பரவி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
இதனால் சீனாவில் மட்டும் இதுவரை 2,835 பேர் உயிரிழந்துள்ளனர். 79,257 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து தொலைதூரத்தில் உள்ள அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் வடகொரியாவில் வைரஸ் பரவியதற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா தாக்கம் இருப்பதாக அறிந்தவுடனேயே தங்கள் நாட்டுக் கதவுகளை மூடிய நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. ஆனால், இதுவரை வைரஸ் பற்றி அவர்கள் வாய்திறக்காமலிருந்து வந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாகத் தன் கட்சியின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன். ஒருவேளை வைரஸ் தங்கள் நாட்டுக்குள் பரவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என அதிபர் கூறியதாக அந்நாட்டு மத்திய செய்தி ஊடகமான கே.சி.என்.ஏ தகவல் தெரிவித்துள்ளது. வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து வாயில்களையும் மூடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார், அதிபர்.
கொரோனா பாதிப்பை அறிந்த உடனேயே வெளிநாட்டினர் வடகொரியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. ரயில், விமானம், கப்பல் என அனைத்துப் போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டு பள்ளிகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதால் அதிபர் இவ்வளவு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாகத் தென் கொரியாவில்தான் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வடகொரியாவிலும் நிச்சயம் வைரஸ் பரவியிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo