பணத்தை திருப்பி அனுப்பிய விக்னேஸ்வரன்! இந்தியாவில் வைத்து மகிந்த வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், ஆனால் அதனை மாகாண சபை சரியாகப் பயன்படுத்தவில்லை பின பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச, அந்நாட்டுப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதன்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கிய பிரதமர் மகிந்த,

“13 ஆவது அரசியல் சட்ட திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதில் உண்மை என்னவென்றால், அந்த சட்டத்தை மாகாணசபை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

உதாரணமாக கூற வேண்டுமாயின், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவழிக்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

இதேவேளை எனது இந்த டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த நவம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவுக்காக போடப்பட்ட அஸ்தி வாரம். இதனூடாக மேலும் வலுவடைந்துள்ளது.

அத்துடன் பிரதமர் மோடி உடனான சந்திப்பு, மிகவும் பயன்மிக்க சந்திப்பாக அமைந்தது.இரு நாடுகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டு விட்டன.

நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடுகளும் நல்ல பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன” என்றார்.
Blogger இயக்குவது.