அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்!!

கட்சிகள் தொடங்கி
காட்சிகள் மாற்றும்
நாடகம் இங்கே வழமையே

மாட்சிகள் மறைக்கும்
இறையென இவர்கள்
வீட்சியை நாடி வருவரே

கோஸ்டிகள் போட்டு
கொள்கைகளற்ற கொக்கரிப்பென
சித்திரிப்பர்

சின்னத் திவலையைக் கண்டும்
களிப்பினில் மூழ்கி
மத்தியில் சென்று மண்டுவர்

விடுதலைப் பாதையை வாதையாய்
ஆக்கியே அக்குரோணிகளாய்
ஆடுவர்

மானத்தின் நிறத்தை ஊனமாய்
வரைந்து உண்டியல் நிறைத்திட
இறை என்பர்

முள்ளியின் வாய்க்காலில்
முடிவதை எண்ணிநாம் அழுதிட்ட போதினில்
கள்ள மௌனியாய் ஆனவர்

இன்றிங்கு வந்திவர் செய்யும் குசும்புகள்
நுசுப்பில் வலியிலா
கொடிபோலானதே

கொடிகள் பறக்கட்டும்
கோபுர முயரட்டும்
கட்சிகள் நீளட்டும்

காந்தனாய் கர்த்தராய் ஆகட்டும்
பல நூறு கதை வைத்து
மேடையில் ஜாடைகள் செய்யட்டும்

காலனவின் சன்னிதியில்
அரசியல் பிழைத்தோற்கு அறம்
கூற்றாகுமென்பது மாறாது.

த.செல்வா
09.02.2020
Blogger இயக்குவது.