விஜய் யாரென்று தெரிந்திருக்கும்: கருணாஸ்!!

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனர் கருணாஸ் இன்று (பிப்ரவரி 11) சந்தித்துப் பேசினார். அப்போது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், இதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமெனவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், தன்னுடைய கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது பற்றிய கேள்விக்கு, “வருமான வரித் துறை சோதனை எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் சட்டப்படி நடத்தப்பட வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நடுநிலையோடு வருமான வரித் துறையினர் அணுக வேண்டும்.

நெய்வேலியில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்தது ரசிகர்கள் உள்பட யாருக்கும் தெரியாது. வருமான வரித் துறையினர் அந்த இடத்திற்குச் சென்று விஜய்யை அழைத்து வந்ததால்தான் அங்கு அதிகளவில் ரசிகர்கள் கூடினர். விஜய்யை பின் தொடரக்கூடியவர்கள் அந்த பகுதியில் மட்டும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தமிழகமும், மத்திய அரசும் உணர வேண்டிய சூழல் உருவாகிவிட்டது” என்று கருத்து தெரிவித்தார் கருணாஸ்.

ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி சில கருத்துக்களை வெளியிடுவதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்கால அரசியல் நலனை கருத்தில் கொண்டு இதில் உள் அரசியல் ஏதும் நடக்கிறதா என்ற எண்ணம் தோன்றுகிறது” என்று பதிலளித்தார்.

த.எழிலரசன்

Blogger இயக்குவது.