தமிழகத்தில் தாமரை மலர்வதை தடுக்க முடியாது!

தமிழகத்தில் பாஜக அரசு மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்று அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சியடைய பல்வேறு முயற்சிகளில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. அண்மைக் காலமாக திரையுலகைச் சேர்ந்த நமீதா, ராதாரவி, பேரரசு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.யாக உள்ள சசிகலா புஷ்பா இன்று பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மேயராக பதவி வகித்திருக்கும் சசிகலா புஷ்பாவை மாநிலங்களை உறுப்பினராக ஆக்கினார் ஜெயலலிதா. ஆனால், அரசியல் ரீதியாக நடந்த சில விவகாரங்களை அடுத்து, கடந்த 2016-ல் அதிமுகவிலிருந்து சசிகலா புஷ்பாவை ஜெயலலிதா நீக்கினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோதிலும், நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினராகவே சசிகலா புஷ்பா செயல்பட்டுவந்தார். இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது. பதவி முடிவுக்கு வர உள்ள நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார் சசிகலா புஷ்பா. டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைந்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, “தமிழகத்தில் அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை; ஆணையிட்டு யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, தமிழகத்தில் பாஜக அரசு மலர்வதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி செய்துவரும் திட்டங்கள் தமிழக மக்களை ஈர்த்துவருகின்றன. அதன் அடிப்படையிலேயே நான் பாஜக இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
Blogger இயக்குவது.