அமெரிக்காவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி!

அமெரிக்காவில் தேவாலயத்தில் மர்ம நபர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான ரிவியராவில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
இறுதி சடங்கு நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் தேவாலயத்தில் இருந்து வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது தேவாலயத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் தேவாலயத்துக்குள் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. அனைவரும் அலறியடித்தபடி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம நபர் தொடர்ந்து, கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு சிறுவனும், ஒரு பெண்ணும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் யார், தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிய ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Blogger இயக்குவது.