இன்று முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம்தான்!!
ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் மார்ச் முதலாம் திகதி முதல் சம்பளம் கணிக்கப்பட்டு அந்தத் தொகை ஏப்ரல் 10 ஆம் திகதி தொழிலாளர்களின் கைகளுக்கு நிச்சயம் கிடைக்கும் எனவும் இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறகையில். “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என அன்று அறிவித்திருந்தேன். இன்றும் அதனையே தெளிவாகக் கூறுகின்றேன். வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் நிச்சயம் இன்று முதல் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தில் சில சரத்துக்களில் சிக்கல் இருப்பதால் – அவற்றைத் திருத்துமாறு கோரியிருந்தோம். அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
குறிப்பாக ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டாலும், மார்ச் முதலாம் திகதி முதலே சம்பளம் கணிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். இன்று முதல் 31 ஆம் திகதிவரை தொழிலாளர்கள், வேலைக்குச் சென்றால், வேலை செய்த நாட்களின் பிரகாரம் ஏப்ரல் 10 ஆம் திகதி முழுமையான சம்பளம் கைகளுக்குக் கிடைக்கும்.
அத்துடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது, அதற்குப் பொறுப்புக்கூற யாரும் இல்லை என்றெல்லாம் சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், நாடாளுமன்றம் கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த நிர்வாகி என்பதால் ஆயிரம் ரூபாயை எப்படி வாங்குதென்றும், வழங்குவதென்றும் அவருக்கு நன்கு தெரியும். நானும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன். எனவே, ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும்.
அதேவேளை, கடந்த காலங்களில் காணி உறுதிப்பத்திரம் என்ற போர்வையில் அட்டையொன்று வழங்கப்பட்டது. அதனை கிராம சேவகரிடம் எடுத்துச்சென்றால் கூட எடுபடாது.
ஆனால், இன்று வழங்கப்படுவது காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் இருந்து நேரடியாகக் கிடைக்கின்றது. இது சட்டபூர்வமானது. இன்று ஒரு தொகுதியினருக்கு வழங்கப்படுகின்றது. ஏனேயோருக்கு விரைவில் பெற்றுக்கொடுப்போம்” என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo