பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பு - தமிழில் 1800 பேருக்கு வெற்றிடம்!

பொலிஸ் உத்தியோகத்திற்கான ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவு இளைஞர், யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைவாக பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவைக்கு இணைக்கும் நோக்குடன் நாடு முழுவதும் ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொலிஸ் கொஸ்தாபல், பெண் பொலிஸ் கொஸ்தாபல் ஆகிய பதவி நிலைகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி நிலைக்காக விண்ணப்பிப்போர் சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் தோற்றி கணிதம், தாய்மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.

ஆண்கள் 5அடி 4 அங்குலத்திற்கு குறையாத உயரத்தினையும், மூச்சு விட்ட நிலையில் 30அங்குலம் மார்பு சுற்றினையும் கொண்டிருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரிகள் 5அடி 2அங்குலத்திற்கு குறையாதவர்களாக இருக்க வேண்டும். குறைந்த உயரம் தொடர்பாக விண்ணப்பங்களைப் பொறுத்து பொலிஸ்மா அதிபரினால் முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆட்சேர்ப்பு நியமனம் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும், நேர்முகத் தேர்வுவும் அந்தந்த மாகாணங்களிலேயே இடம்பெறும் எனவும் ஆட்சேர்ப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 1800 தமிழ் மொழி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் பயிற்சிக் காலத்தில் வேதனம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டுள்ளதாகவும், வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் 18 முதல் 28 வரை வயதெல்லை கொண்ட திருமணமாகாத இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களைப் பெற்று தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி பொலிஸ் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஜெகத் குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கில் காணப்படும் தமிழ் மொழி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும், பொலிஸ் சேவையை விரிவுபடுத்துவதற்குமான அவசர ஆட் சேர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும், அரச வேலை வாய்ப்பிற்காகக் காத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவங்களை கிளிநொச்சி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.