மீண்டும் நிறுத்தப்பட்ட தூக்கு!’ - நிர்பயா வழக்கில் என்ன நடக்கிறது!!

நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 4 பேரும் ஜனவரி 27-ம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நிதிமன்றம் அறிவித்தது. குற்றவாளிகள், கருணை மனு தாக்கல் செய்ததையடுத்து, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது. மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

`என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என 7 வருடங்களாகக் காத்திருக்கிறேன். மார்ச் 3-ம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்பது சந்தேகம்தான். மார்ச் 3-ம் தேதி குற்றவாளிகள் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என வழக்கறிஞர் ஏ.பி.சிங் தன்னிடம் சவால் விடுவதாக, ஆஷா தேவி முன்பே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா கடந்த சில வாரங்களுக்கு முன் சிறையில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார். தனக்கு மனநிலை சரியில்லை... மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என அவர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கலானது தான் ஹைலைட். வினய் சர்மா நல்ல மனநிலையில் இருக்கிறார். தூக்குத் தண்டனை தள்ளிவைப்பதற்காக இதுபோன்ற டிராமாக்களை செய்கிறார்கள் என்றது திகார் நிர்வாகம்.

இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27-ம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை தவறானது என்றும், தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடிசெய்தனர்.

வழக்கு விசாரணையின்போது, `நீங்கள் தீயுடன் விளையாடுகிறீர்கள், ஜாக்கிரதையாக இருங்கள்' என பவன் குப்தாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கை நீதிபதி எச்சரித்தார்.

`இந்த மக்கள், நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்கள், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றனர். இந்தியாவின் நீதி அமைப்பின்மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இறுதியாக, குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்படுவார்கள் என நாங்கள் இன்னமும் உறுதியாக நம்புகிறோம்” என்கிறார், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி.

உச்சநீதிமன்றம் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் பவன் குப்தா தரப்பில் குடியரசுத் தலைவர் முன்பு கருணை மனுவை தாக்கல் செய்தார். இந்தநிலையில் தற்போது நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

`நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டபடி குற்றவாளிகள் நாளை தூக்கிலிடப்பட மாட்டார்கள். குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு இன்னமும் நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியிலான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு இன்னமும் முடியவில்லை” எனக் கூறி தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளது டெல்லி நீதிமன்றம்.

டெல்லி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை கேட்டதும், ``என் மகளை பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசிவிட்டு சென்றனர். அவளது குடல்கள் வெளியில் கிடந்தது. இந்த நீதிமன்றங்கள் அவர்களது நாடகத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன” என ஆஷா தேவி காட்டமாக பேசினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.