தமிழ் தேசியப் பசுமை இயக்கம் தனித்து போட்டியிடுகிறது - ஐங்கரநேசன்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.


முதலில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள நினைத்திருந்த நிலையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று என்று அவர் அமைத்திருக்கும் கூட்டணி ஏமாற்றம் தருகின்ற கூட்டணியாக அமைந்திருப்பதாலேயே அந்தக்கூட்டணியில் இணைந்து தங்களால் பயணிக்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ். மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு அறிவித்துள்ளார்.

அவர் உரையாற்றுகையில், “விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அந்த நோக்கத்துக்காகவே விடுதலைப் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியும் இருந்தார்கள்.

ஆனால், யுத்தத்துக்குப் பிறகு சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தைப் பிணையெடுக்கும் விதமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடந்துகொண்டது. இன்று அரசியல் அரங்கில் அவர்கள் காலாவதியாகிவரும் நிலையில் தமிழ் மக்களுக்கான தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

வெற்றிடத்துக்குள் காற்றுப் புகுவதுபோல, தலைவர் பிரபாகரன் இல்லாத அரசியல் வெளிக்குள் எல்லோரும் தாங்கள்தான் அடுத்த தலைமை என்று ஆளாளுக்குப் போட்டி போடுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான மாற்று அணி தாங்கள்தான் என்று கூறுகிறார்கள்.

தாங்கள்தான் மாற்றுத் தலைமை என்று எவரும் உரிமை கோரமுடியாது. தமிழ் மக்களே தங்களுக்கான சரியான தலைமையைத் தேர்ந்தெடுப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரமே கூட்டமைப்பின் பிளவுகளுக்கும் பிழைகளுக்கும் பிரதான காரணமாக இருக்கின்ற நிலையில், கூட்டமைப்புக்கு மாற்றீடாக கூட்டமைப்புப் போன்ற ஒரு மாற்று அணி எங்களுக்கு அவசியம் இல்லை.

போருக்குப் பிந்திய தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கான புதிய ஒரு அரசியல் அணி தமிழ் தேசியக் கூட்டமைப்பைவிட சகல விடயங்களிலும் மேம்பட்டதாக இருக்கவேண்டும். அந்தவகையில் புதிய ஒரு அரசியல் கூட்டில் தமிழ் தேசியப் பற்றுறுதி கொண்ட கட்சிகள் முடிவெடுக்கும் இடத்தில் சமபங்காளிகளாக இருக்கவேண்டும்.

ஆனால், மாற்று அணி என்று தாங்கள்தான் என்று சொல்பவர்கள் இத்தகைய ஒரு மறுசீரமைப்புக்குத் தயாராக இல்லை. தேர்தலை மட்டுமே இலக்காகக் கொண்ட சந்தர்ப்பவாதக் கூட்டணிகளில் இணைந்து பிழையானவர்களைப் பலப்படுத்தக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தனியாகத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.