ஜனாதிபதியின் கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்!

காணாமல் ஆக்கபட்டவர்கள் இல்லை என்றும், தம்மிடம் 8 பேர் மாத்திரமே கையளிக்கபட்டனர் என்றும் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்து முற்றுமுழுதாக பொய் என்று வவுனியாவில் கடந்த 1114 நாட்களாக சுழற்சிமுறை போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி தெரிவித்தது முற்றுமுழுதான பொய்யான கருத்து நாம் உண்மையை சொல்லி தான் போராடுகின்றோம். அவர்கள் பொய்களை சொல்லி கொண்டிருக்கின்றார்கள்.

நாம் பொய் சொல்லி போராட்டம் மேற்கொள்ளவில்லை. சிங்கள பேரினவாத தலைவர்கள் எப்பொழுதும் தமது இனத்தையும், இராணுவத்தையும், பௌத்தத்தையும் பாதுகாப்பார்கள் என்பது 74 வருடகால அனுபவம்.

இதேவேளை, தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டமைப்பும் இலங்கையை பாதுகாக்கின்றது. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற‌ வேண்டும் என்றே சிங்களதேசம் விரும்புகின்றது. அப்போது தான் ஒற்றையாட்சியையும் ஏக்கியராச்சியத்தையும் உருவாக்கலாம் என்பது அவர்களது விருப்பம்.

கூட்டமைப்பில் தமது பைகளை நிரப்பும் தலைவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் தமிழர்களிற்கு துரோகமே செய்கிறார்கள். இலங்கையில் காணாமல் ஆக்கபட்ட தமிழர்கள் அடிமைகளாகவும், வீட்டுவேலைக்கும் வெளிநாடுகளிற்கும், விற்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும் என்றால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தேவை. அந்த நாடுகள் வந்தால் தமிழர்களின் 72 வருடகால தாகம் தீரும்.

தமிழர்களிற்கு அபிவிருத்தி மாத்திரமே தேவை என்று ஜனாதிபதி கருத்து தெரிவித்திருக்கின்றார். அவர் மீண்டும் வெற்றி பெற்றால் தமிழர்களிற்கு அபிவிருத்தியும் தேவை இல்லை என்று கூறுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
Blogger இயக்குவது.