சர்வதேச மகளிர் தினத்தை இலங்கையில் தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரிக்கை!

சர்வதேச மகளிர் தினத்தினை இலங்கையில் தேசிய விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


அத்துடன், கிழக்கை நேசிக்கும் கட்சிகளையும் கிழக்கு மாகாணத்தினை நேசிப்பவர்களையும் இணைத்து தேர்தல் கூட்டணியை எதிர்வரும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான செல்வி மனோகரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் பிரதித் தலைவர் கே.யோகவேள், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கெனடி பிரான்சிஸ், ஆலோசகர் ஸ்டாலின், சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் க.துரைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டதுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டனர். இதன்போது மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் இருந்து மாபெரும் ஊர்வலம் ஒன்று ஆரம்பமானது.

‘பெண்கள் சமத்துவத்தினை உறுதிப்படுத்து’ என்னும் தலைப்பில் இந்த ஊர்வலம் ஆரம்பமாகி மட்டு. நகர் ஊடாகச் சென்று கட்சியின் தலைமையகத்தினைச் சென்றடைந்ததும் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ள பெண் மற்றும் கிராமிய ரீதியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.