'ஜிப்ஸி' திரைப்பட விமர்சனம்!!

எழுத்தாளரும் இயக்குனருமான ராஜூமுருகன் இயக்கிய ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ நல்ல வரவேற்பை பெற்றதால் அவருடைய அடுத்த படமான ‘ஜிப்ஸி’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்போல் இந்த படம் சென்சாரில் சிக்கி, கடும் போராட்டத்திற்கு பின் ரிலீஸ் ஆவதால் அப்படி என்னதான் அந்த படத்தில் இருக்கின்றது என்பதை பார்க்க அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை இயக்குனர் பூர்த்தி செய்தாரா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.


பிறந்த சில நாட்களிலேயே தாய் தந்தையை ஒரு மதக்கலவரத்தில் இழக்கும் ஜிப்ஸி (ஜீவா) அதன் பின் ஒரு நாடோடியிடம் வளர்கிறார். பலரிடம் பால் குடித்து நாடு முழுவதும் சுற்றி நாடோடியாக வளரும் ஜீவா, ஒரு நல்ல பாடகராகவும் ஆகிறார். குதிரை மற்றும் பாடல் ஆகியவற்றை வைத்து பிழைப்பு நடத்தும் ஜீவா, எதிர்பாராதவிதமாக நாயகியை பார்க்கின்றார். எந்த மதத்தையும் சாராத ஜிப்ஸிக்கும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நாயகி நடாஷாவுக்கும் காதல் மலர்கிறது. வழக்கம்போல் மதம் இந்த காதலுக்கு குறுக்கே நிற்க, வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்கிறார். கர்ப்பமான மனைவியுடன் வட இந்தியாவில் ஜிப்ஸி வாழ்ந்து வரும் நிலையில் திடீரென ஏற்படும் மதக்கலவரம் காரணமாக இருவரும் பிரிகின்றனர். அதன்பின் இருவரின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? இருவரும் இணைந்தார்களா? மதவெறி அவர்களை இணைக்கவிட்டதா? என்பதுதான் மீதிக்கதை

ஒரே ஒரு வெற்றிக்காக கடந்த சில வருடங்களாக போராடி வரும் ஜீவா, இந்த படத்தை வெற்றிப்படமாக ஆக்கியே தீரவேண்டும் என்ற வெறியுடன் நடித்துள்ளார். முதல் பாதியில் இவருடைய ரொமான்ஸ் காட்சிகள், புரட்சிகரமான வசனங்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. ஒரு வருடத்திற்கு பின் மனைவியை சந்திக்கும் காட்சி, குதிரையை இழக்கும் காட்சி, ஆகியவற்றில் ஜீவா நடிப்பில் அசத்துகிறார்.

நாயகி நடாஷா காதலிக்கும்போது சரி, இரண்டாம் பாதியிலும் சரி பெரும்பாலும் மெளனமாகவே உள்ளார். இருப்பினும் ஆங்காங்கே நடிப்புக்கு தீனி இருந்தாலும் இவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இயக்குனர் வேலை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.



நாயகன், நாயகியை தவிர இந்த படத்தில் மொத்தமே நாலைந்து கேரக்டர்கள் தான். குறிப்பாக நாயகியின் தந்தை, கம்யூனிஸ்ட் தலைவரான சன்னிவயானே, பாடகியாக வரும் உண்மையான பாடகியான சுசீலா ராமன் ஆகியோர்களின் நடிப்பு ஓகே ரகம்

சந்தோஷ் நாராயணின் இசையில் மொத்தம் எட்டு பாடல்கள். எந்த பாடலையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. கிளைமாக்ஸ் பாடலான ‘வெண்புறா’ பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை இயக்குனர் காட்சிகளில் கொடுத்தபோதிலும் இசையமைப்பாளர் கொடுத்தது ஏமாற்றமே. அதுமட்டுமின்றி பாரதியாரின் ’ஆசை முகம்’ பாட்டை இதைவிட யாராலும் கொலை செய்ய முடியாது. இந்த பாடலை சுசீலா ராமனே இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

செல்வகுமாரின் ஒளிப்பதிவு மிக அருமை. பார்வையாளர் அனைவரையும் இந்தியா முழுவதையும் நேரடியாக அழைத்து கொண்டு சுற்றிக்காண்பித்தது போல் இருந்தது. மதக்கலவரம் காட்சி அதிர வைத்தது

எடிட்டர் ரெய்மண்ட் டெட்ரிக் கிரஸ்டா கட் செய்தது போக, சென்சார் அதிகாரிகளும் ஏகப்பட்ட எடிட்டிங் வேலையை பார்த்துள்ளதால் படம் ஆங்காங்கே புரியாமல் ஜம்ப் ஆகிறது. இருப்பினும் இன்னும் ஒருசில தேவையில்லாத காட்சிகளை வெட்டியிருக்கலாம்.

ஒரு முஸ்லீம் பெண்ணுக்கும் இந்து பையனுக்கும் ஏற்பட்ட காதல், அந்த காதல் மதத்தில் சிக்கி சின்னாபின்னாமானது, இருவரும் இந்து, முஸ்லீம் கலவரத்தில் மாட்டிக்கொண்டு படும் கஷ்டம் ஆகியவற்றை 25 வருடங்களுக்கு முன்பே மணிரத்னம், ‘பம்பாய்’ என்ற ஒரு சூப்பர்ஹிட் படத்தில் சொல்லிவிட்டார். அந்த படத்தில் இருந்த அழுத்தமான காதல், இரு மதத்தினர்களிடமும் இருந்த பாசிட்டிவ் நெகட்டிவ்கள் ஆகியவற்றில் ஒரு பத்து சதவீதம் கூட இந்த படத்தில் இல்லை என்பதும் மணிரத்னம் சொல்லாதது எதையும் ராஜூமுருகன் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகி தன்னுடைய காதலை சொல்லும் வரை நாயகனுக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லை என்பது ஆச்சரியமான ஒன்று. நாயகன் மீது நாயகிக்கு காதல் ஏற்பட கூறப்பட்ட காரணம் அழுத்தம் இல்லாமல் இருந்தது. மேலும் மதக்கலவர காட்சிகள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டதாகவும் இன்னொரு மதத்தவர் முற்றிலும் பாதிக்கப்பட்டவராகவும் இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது சரியா? என்பதை இயக்குனரின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.

படத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராஜூமுருகனின் டச் ஆங்காங்கே உள்ளதை மறுக்க முடியாது. குறிப்பாக போலீஸ் ஸ்டேஷனில் ஜீவா யூரின் போவது, பாதிக்கப்பட்ட பெண்ணையும் பாதிப்பு ஏற்படுத்திய தீவிரவாதியையும் சந்திக்க வைப்பது ஆகிய காட்சிகள் அருமை. இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கிய படம் என்றாலும் இன்றைய அரசியல் நிகழ்வுகளுக்கு சரியாக ஒத்துப்போவதும் இயக்குனருக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டமே. மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்பின்றி படம் பார்க்க சென்றால் ஏமாற்றம் இல்லாமல் திரும்பி வரலாம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.