கேரளாவில் தொடரும் கொரோனா போராட்டம்!!

கொரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸை எதிர்த்து கடுமையாகப் போராடி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 100-க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 4000 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 302 பேர் மருத்துவமனை கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளனர். வைரஸ் உறுதியான 22 பேருக்கும் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.


கேரள மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்கள், திரையரங்கங்கள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலா தளங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோன அச்சம் காரணமாக இன்று காலை கொச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்குச் செல்ல தயாராக இருந்த எமிரேட்ஸ் விமானம் தடுத்து நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 19 சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையைக் கழிக்கக் கடந்த மாதம் கேரள மாநிலத்துக்கு வந்துள்ளனர். இங்குப் பல இடங்களைப் பார்வையிட்ட பிறகு இறுதியாக மூணாறில் தங்கி இருந்துள்ளனர். அப்போது 19 வெளிநாட்டுப் பயணிகளுக்கும் கொரோனா சோதனை நடைபெற்றுள்ளது. சோதனை முடிவுகள் நேற்று முன் தினம் வந்துள்ளது. அந்த 19 பயணிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து உஷாரான கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள், உடனடியாக அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொடர்புகொண்டு அவர்களைப் பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.


அதில் அந்த பயணிகள் அனைவரும் இன்றைய எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் செல்லவிருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் உடனடியாக கொச்சி விமானநிலையத்தில் 19 பயணிகளையும் தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் அனைவரும் விமானத்தில் ஏறி விமானமும் புறப்படத் தயாராக இருந்துள்ளது. அப்போதும் விடாத அதிகாரிகள் பைலட்டை தொடர்புகொண்டு பறக்கத் தயாரான விமானத்தை நிறுத்துமாறு கூறி அந்த 19 பயணிகளையும் இறக்கிவிடத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கேரளாவில் கொரோனா சூழல் மோசமடைந்து வரும் நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த அதாவது விமானத்தில் பயணிக்கத் தயாராக இருந்த மொத்த 270 பயணிகளையும் இறக்கி அவர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்துள்ளனர். “முதலில் 19 வெளிநாட்டுப் பயணிகளை மட்டும் இறக்கிவிடவே முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதிக்கப்பட்டவர் மற்ற பயணிகளுடன் கலந்துவிட்டதால் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளும் நோக்கில் 270 பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்” என்று கொச்சி விமான நிலையத்தில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.