சாதாரண சளிக் காய்ச்சலுக்கும் கொரோனாவுக்கும் உள்ள வேறுபாடுகள்!!

தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சொல் `கொரோனா'. காட்டுத் தீபோல் பரவிக்கொண்டிருக்கும் கோவிட்-19 கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது.



நாம் சாதாரணமாக நடந்து செல்லும்போது அருகில் செல்லும் யாரேனும் தும்மினாலும், இருமினாலும்கூட, ``அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பாரோ..? வைரஸ் நம்மையும் தொற்றிக்கொள்ளுமோ..?" என்ற சந்தேகத்துடன் கூடிய பயம் நம்மில் பெரும்பாலோனோருக்கு ஏற்பட்டிருக்கும்.


நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அதற்கு அவர் கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டிருப்பார் என்பதில்லை.

சாதாரண சளி, ஃப்ளு காய்ச்சல், அலர்ஜியினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், தலைவலி, தொண்டைக் கரகரப்பு, உடம்பு வலி, வயிற்றுப்போக்கு, மூக்கொழுகுதல் தும்மல் மாதிரியான அறிகுறிகள்தான் தோன்றும்.

எனவே கொரோனாவின் உண்மையான அறிகுறிகள் என்ன, சாதாரண சளி, ஃப்ளு காய்ச்சல், அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சாதாரண சளி:

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் ஏற்படும் ஒன்று சாதாரண சளி. சாதாரண சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதாவது காய்ச்சல், தலைவலி ஏற்படும்.


லேசான வறட்டு இருமல் ஏற்படும். இதில் மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. வயிற்றுப்போக்கும் ஏற்படுவதில்லை. சிலநேரங்களில் உடல்வலி ஏற்படலாம். இதில் தும்மல், மூக்கொழுகுதல், தொண்டைக் கரகரப்பு போன்றவை பொதுவான அறிகுறிகள்.

ஃப்ளூ காய்ச்சல்:

ஃப்ளூ காய்ச்சலில் காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி, தொண்டைக் கரகரப்பு, உடம்பு வலி போன்றவை பொதுவாக ஏற்படும் அறிகுறிகள்.


இதில் மூச்சுத்திணறல் ஏற்படுவதில்லை. தும்மலும் ஏற்படுவதில்லை. சிலவேளைகளில் மூக்கொழுகுதலும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம்.


அலர்ஜி பாதிப்புகள்:
ஒருவருக்கு உடலில் அலர்ஜி ஏற்படப் பலவித காரணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டிற்கு சிலருக்குத் தூசி, பூக்களின் மகரந்தம், சில உணவுப் பொருள்கள், ரசாயனங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

அலர்ஜி ஏற்பட்டவர்களுக்குச் சிலநேரங்களில் காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி மற்றும் உடம்பு வலி ஏற்படலாம். மூக்கொழுகுதல், தும்மல், மூச்சுத்திணறல் அலர்ஜியினால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள். தொண்டைக் கரகரப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை பெரும்பாலும் இதில் ஏற்படுவதில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தும்மல் ஏற்படுவதில்லை. எனவே, தும்மல் கொரோனாவின் அறிகுறியல்ல. சில வேளைகளில் தலைவலி, தொண்டைக் கரகரப்பு, உடம்பு வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் தாக்குதலின் முக்கிய அறிகுறிகள். இதில் மூக்கொழுகுதல், வயிற்றுப்போக்கு போன்றவை எப்போதாவது ஏற்படலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.