175 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சிக்கிய 5 ஆண்களும் பெண்ணும்

சர்வதேச கடல் பரப்பு ஊடாக இரு மீனவப் படகுகளைப் பயன்படுத்தி சுமார் 175 கோடி ரூபா பெறுமதியுள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் எனும் (மெதம்பிடமைன்) போதைப் பொருட்கள் நாட்டுக்குள் கடத்தப்படும் போது, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து முன்னெடுத்த விஷேட சுற்றிவளைப்பின் போது, காலி, தெற்கு குடாவெல்லை கடல் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.



இது குறித்து ஒரு பெண் உள்ளிட்ட 6 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டது.

இவர்களில் நால்வர் இரு படகுகளில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பெண் உட்பட இருவர் போதைப் பொருளினைப் பெற்றுக்கொள்ள கரையில் காத்திருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்கள் கைதாகும் போது, அவர்களிடமிருந்து 74 கிலோ 666 கிராம் ஹெரோயின் போதைப் பொருளினையும் 65 கிலோ 714 கிராம் ஐஸ் போதைப் பொருளினையும் மீட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கூறினர்.

தென் ஆசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ள இந்த போதைப் பொருளானது, ஈரான் படகொன்றின் ஊடாக சர்வதேச கடல் பரப்புக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு வைத்து இரு இலங்கை மீனவப்படகுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.

அதன் பின்னர் கடந்த பெப்ர்வரி 28 ஆம் திகதி இந்த போதைப் பொருட்கள் இலங்கை கடல் பரப்புக்குள் எடுத்து வரப்படும் போது, குடாவெல்ல கடல் பரப்பில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடற்படையினருடன் இணைந்து சுற்றிவளைப்பை முன்னெடுத்து சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
Blogger இயக்குவது.