பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல்..!

பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் தமிழீழ நிதிப் பொறுப்பாளராகத் தான் எம்மில் பலருக்கு தெரியும். அதையும் தாண்டி தமிழ் மொழிக்காக அவர் ஆற்றிய பணியும்,அவர் வாழ்ந்த எளிமையான வாழ்வையும் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

உண்மையில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் வாழ்க்கைச் சூழல் ஆனது இயற்கையுடன் ஒன்றித்ததாகவே இருந்தது. எப்போதும் அவருடைய தங்குமிடங்கள்( பாசறை ) இயற்கை சூழ்ந்ததாகவும் அமைதியானதாகவும் இருக்கும். சுற்றாடல்கள் எங்கும் ஆயுள் மூலிகை நிறைந்த செடிகளும் ,செங்காந்தள்( கார்த்திகைப்பூ) செடிகளும் , கொடிகளால் ஆன குடில்களும் ,வாழை, அன்னாசி,மரவள்ளி,தென்னை என பல வகை மரங்களாலும் சூழ்ந்த அழகிய இடமாகவே காணப்படும்.
அவரது படுக்கை அறையிலே ஒரு வேப்பமரப்பலகையினால் செய்யப்பட்ட கட்டிலும் ,பழைய துவாய் ஒன்றும், ஒரு சிறிய தலையணையும் , விரித்துப் படுக்க பழைய சாரம் ஒன்றும்,பின் பாய் ஒன்றும் இருக்கும்.
அவருடைய உடை வைக்கும் மர அலுமாரியில் 3 சோடி வரிச்சீருடை, சாரம்,ரீசேட்,சாதாரண சேட்டும் ,நீளக்காற்சட்டை, காலுறைகள் மட்டுமே இருக்கும். எப்போதும் எளிமையாகவே இருப்பார்.

வன்னியிலே இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த காலம். அது ஜெயசிக்குறு படை நடவடிக்கை எறிகணை வலுவான யுத்தம் இடம்பெற்று வந்த காலம். அப்போது வன்னி கிழக்கு , வன்னி மேற்கு என இரண்டாக ஆளுகைப் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது . அக்காலப்பகுதியில் தமிழ்மொழி பற்றியும், தமிழர் வரலாறு பற்றியும் போராளிகளுக்கு பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் இரு பகுதிகளாகப் பிரித்து வகுப்பு எடுத்து வந்தார். அதுமட்டுமல்ல வாணிப நிலையங்களுக்கு தமிழ் பெயர் மாற்றத்தில் தொடங்கி குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டும் பணி வரை அதிமுக்கியத்துவம் செயற்பட்டார் . பின் 21ஆயிரம் தமிழ் பெயர் கொண்ட பொத்தகம் ஒன்றை பண்டிதர் பரந்தாமனின் உதவியுடன் எழுதி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பிள்ளைகளுக்கு தமிழ் பெயர் மாற்றம் செய்யும் வேலையை வெற்றி கரமாக செய்து முடித்தார். இப் பெயர் மாற்றம் பணியில் மாவீரர் லெப்.கேணல் இளவாணனும் பெரும்பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய தொன்றாகும்.
தமிழீழ நிழலரசின் கட்டு மானங்களில் நிதி சார்ந்த கட்டுமானங்கள் அனைத்தையும் மிக நீண்ட கால நோக்குடன் செம்மையாக உருவாக்கினார்.
பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சந்திப்பு ( கூட்டம்) என்றால் உரிய நேரத்திற்குள் மண்டபத்திற்குள் சென்று இருக்க வேண்டும். ஏனென்றால் சரியான நேரத்திற்கு சந்திப்புத் தொடங்கி விடும். இரண்டு நிமிடம் தாமதமானாலும் உள்நுழைய முடியாது. நேரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பொறுப்பாளர்களில் பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் முதன்மையானவர்.
பிரிகேடியர் தமிழேந்தி அவர்களினால் உருவாக்கப்பட்ட பண்ணைகள் ( தோட்டம்) அனைத்தும் பிரமாண்டமானவை. அப்பண்ணைகளில் பழமரக்கன்றுகளைப் பார்க்க ஆசையாக இருக்கும். அதில் மாமரம் என்றால் மாமரத்தில் எத்தனை வகைகள் இருக்குமோ அத்தனையும் அங்கு இருக்கும். மரங்கள் பூத்துக் காய்க்கும் காலத்தில் இருந்த காலம் அப்போது நான் ஏன் பழமரங்களை தேர்ந்தெடுத்து நிறைய வைத்திருக்கின்றேன் என்றால் கள முனைகளில் நிற்கும் போராளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக பழங்களை அனுப்பவேண்டும் என்பதற்காகத்தான் என பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் அடிக்கடி கூறுவதை கேட்டிருக்கிறோம். அவருக்கு எப்போதும் களமுனைகளில் நிற்கும் போராளிகளின் நினைப்புத்தான்.
தமிழீழ நிதிப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் சிறப்பியல்புகளில் எளினம்,உண்மை, நேர்மை, கடமை, நேரம் என்பவற்றை பார்க்கலாம். இதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே யாருக்கும் கொடுக்காத பொறுப்பு ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு கொடுத்தார் என்றால் மிகையில்லை .
முதன் முதலாக படைத்துறை செயலர் என்னும் பொறுப்பு பிரிகேடியர் தமிழேந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதுவே அவரது உண்மைக்கும் ,நேர்மைக்கும் கிடைத்த பரிசாகும்.

தமிழீழம்


Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Blogger இயக்குவது.