தினசரி நடிகர்களுக்கு கைகொடுத்த யோகி பாபு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 1250 கிலோ அரிசி வழங்கி உதவி புரிந்துள்ளார் யோகி பாபு. கொரோனா தொற்று பாதிப்பால் நாடெங்கும் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். தினசரி வருமானத்தை நம்பி மட்டுமே இருப்பவர்களுக்கு இந்த ஊரடங்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அனைத்து துறைகளைப் போலவே சினிமா துறையும் முடக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் அனைத்தும் ஊரடங்கு முடியும் வரை நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால், ‘ஷூட்டிங் பேட்டாவை’ மட்டுமே நம்பியிருப்போர் நிலை சிக்கலாகியுள்ளது. 




 இதற்கிடையில், திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். இந்த உதவிகள் தொடர்பாக நேற்று(ஏப்ரல் 8), செல்வமணி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து உதவிகள் செய்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்திருந்தார்.


 அதே போல, நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு உதவ நிதியுதவி அளிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், பலரும் நிதியுதவி அளிக்க முன்வராத காரணத்தால் 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு யோகி பாபு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார்.


யோகி பாபு நேரிலேயே சென்று உதவிகள் வழங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தனது குலதெயவம் கோவிலில் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு, இம்மாதம் தனது திருமண வரவேற்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தார். கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது திருமண வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


 -முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.