தமிழரசுக்கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசுக் கட்சியினால் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


இறுதி யுத்தத்தில் உயிர் நீர்த்தவர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இன்று(திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணியளவில் தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்ற கட்டளையினை வழங்கியதன் அடைப்படையில் குறித்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்துதல், அதிகளவானோர் ஒன்றுகூடுவதன் காரணமாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் காணப்படுகின்றது ஆகிய காரணங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் குறிப்பிடப்பட்டு நீதிமன்றின் ஊடாக குறித்த நிகழ்வுக்கு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களில் இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உள்ளிட்ட கட்சியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தினை சூழ பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்துதல் என்ற பதத்தினை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே தாங்கள் இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்ததாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

Blogger இயக்குவது.