'4ஜி' பட இயக்குநர் மரணம்!

தமிழ் திரைப்பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத். சி.வி.குமார் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்-காயத்ரி சுரேஷ் நடித்துள்ள '4ஜி' திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். திரைப்படத்துக்காகத் தனது பெயரை வெங்கட் பாக்கர் என மாற்றியிருந்தார்.



இந்தப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் இயக்குநர் அருண் பிரசாத்தின் திடீர் மரணம் தமிழ் திரை உலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்புத்தூரில் இன்று(மே 15) காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் அவர் அகால மரணமடைந்தார். இயக்கிய முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே அருண் பிரசாத் மரணமடைந்த செய்தி அனைவருக்கும் வேதனையைத் தந்துள்ளது.





நடிகர் ஜி.வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் பிரசாத் குறித்து குறிப்பிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குநர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்"என்று குறிப்பிட்டுள்ளார்.



இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில்,"எனது முன்னாள் உதவியாளரும், இளம் இயக்குநருமான அருணின் திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் இனிமையானவர், நேர்மறையானவர். கடின உழைப்பாளி. உங்களுக்காக என்றும் நான் பிரார்த்தனை செய்வேன். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



கடந்த சில நாட்களாக சினிமா உலகம் தொடர் துயரங்களை சந்தித்து வருகிறது. ஒருபுறம் ஊரடங்கு உத்தரவால் பெரும் பொருளாதாரச் சிக்கலில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர், படப்பிடிப்பு நடத்த முடியாமலும், பட வேலைகள் முடிந்தும் ரிலீஸ் செய்யப்படாமலும் ஏராளமான திரைப்படங்கள் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

மறுபுறம் திரையுலகினரின், எதிர்பாராத மரணங்கள் அனைவரையும் மேலும் வருத்தமடைய செய்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.