விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பாதிப்புகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆத்மநிர்பார் பாரத் அப்யான் (தன்னிறைவு இந்தியா) பொருளாதாரத் தொகுப்பினை அறிவித்தார். இதுபற்றி துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். நேற்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கான 9 திட்டங்களை அறிவித்தார்.இதுதொடர்பாக இன்று (மே 15) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாகப் பயனளிக்கும் ஆக்கப்பூர்வமான நிவாரணங்களைக் கொடுக்காமல் - அலங்காரப் பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என்று இன்னமும் கூட மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

20 லட்சம் கோடி நிவாரணம் என்ற பாஜகவின் அரசியலுக்கான தலைப்புச் செய்தி - ஏழை எளிய மக்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது நாள் அறிவிப்பும் இருப்பதாக விமர்சித்த ஸ்டாலின், “திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு வரும், 5000 ரூபாய் நிதியுதவியையோ, காங்கிரஸ் வலியுறுத்தியுள்ள 7500 ரூபாய் நிதியுதவியையோ பணமாக, நேரடியாக, உடனடியாக வழங்க மனமின்றி குறிப்பாக விவசாயிகளுக்கு மேலும் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.நடைபாதை வியாபாரிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனாம். அதுவும் வறுமை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் வாழ்வாதாரம் கண்ணுக்கு எட்டும் தொலைவில் இல்லாத நிலையில், இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தத் திட்டம் வருமாம். வீடு தீப்பிடித்து எரியும்போது, உடனடியாகக் கிடைக்கும் தண்ணீரையும், மண்ணையும் வாரி இறைத்து அணைத்திட முயற்சிப்பதைப் போன்றது, பணமாகக் கொடுக்கப்படும் நிவாரண உதவி என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

முதல் உதவியைப் போன்றது, உடனடியாகக் கொடுக்கப்படும் நிவாரணப் பணம். ஏற்கெனவே வாங்கிய கடனையே திருப்பிச் செலுத்த முடியாமல், பல நூறு கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்திய விவசாயிகள் தலையில் மீண்டும் கடன் என்ற பாறாங்கல்லை ஏற்றி வைப்பது எந்த வகை நிவாரணம் எனக் கேள்வி எழுப்பியதோடு, “உடனடியாகப் பசிப்பிணி தீர்க்கும் இந்தியாதான் இன்றைய அவசரத் தேவையே தவிர, ‘மேக் இன் இந்தியாவோ’, ‘ஸ்டேண்ட் அப்’ இந்தியாவோ அல்ல. இந்தியர்களுக்கு உணவளித்திட வேண்டியது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் கடமை” என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், “விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்கியும், எண்ணற்ற ஏழை, எளிய தாய்மார்கள் உட்பட ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நேரடி பண உதவியும் வழங்க வேண்டும்.

அதைவிடுத்து பணம் கொடுக்க முடியாது, இந்தா கடன் வாங்கிக் கொள் என்று சொல்வது, குறைந்தது ஐம்பது சதவிகித இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவாது. 'ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாபத்தைத் தீராத் தண்ணீர்' போன்றதுதான் மத்திய பாஜக அரசின் ஆரவாரமான அறிவிப்புகள்” என்றும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

எழில்
Powered by Blogger.