உயர் மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!!
மே- 11ம் திகதிக்கு பின்னர் நாட்டில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் குழுக்களோடு கலந்துரையாடல் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அரச மற்றும் தனியார் துறையின் அனைத்துச் சேவைகளையும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விரிவான திட்டங்களை சுகாதாரத் துறையினருக்கு முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து நடவடிக்கைகள் உரிய சுகாதார முறைமைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், நிறுவனங்களின் பணியாளர்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குவதில் அந்தந்த நிறுவனங்களின் நலன்புரிச் சங்கங்களுடன் இணைந்து திட்டமிடக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கையில் ஊழியர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் போது அந்தந்த நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிறுவன கட்டமைப்புக்கு ஏற்ப பணி முறைமாற்றங்களைத் தீர்மானிக்க முடியும். சேவைக்குச் சமூகமளிக்கும் நேரத்தை ஒரு நிர்ணயமாக அன்றி, நிறுவனத் தேவையின் படி தீர்மானிக்க வேண்டும்.
வீடுகளில் இருந்து பணிபுரியும்போது சில நிறுவனங்கள் விரிவான ஒழுங்கில் சேவைகளை வழங்கியுள்ளன.அந்த முறைகளை மேலும் மேம்படுத்தி முன்னெடுத்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்பாடுகளைச் செய்வதுடன், அதற்கு சட்ட ஏற்பை வழங்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அடையாள அட்டை, கடவுச் சீட்டு மற்றும் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வலய கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைத் திறக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது நீர் வசதி, துப்பரவு ஏற்பாடு மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், விவசாயம், கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்திப் பணிகள் ஏனைய மாவட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மே 11ம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் மாவட்டங்களிலும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட முடியும்.வேலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்களைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் நேரடிக் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் மே 11 திங்கள் முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




