கனிகா கபூரின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த டாக்டர்கள்!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பாடகி கனிகா கபூரின் பிளாஸ்மா தானத்தை ஏற்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பிரபல பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மிகப் பெரிய சர்ச்சையாக மாறியது. லண்டனிலிருந்து திரும்பி வந்த கனிகா கபூர் உரிய பரிசோதனை மேற்கொள்ளாமல் சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றது விவாதமாக மாறியது.



அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு நோய்த் தொற்றிலிருந்து மீண்டுவந்த கனிகா கபூர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்யத் தயாராக இருப்பதாக கனிகா அறிவித்தார். ஆனால், அதற்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பிளாஸ்மா தானம் செய்பவருக்கு சில உடற்தகுதிகள் இருக்க வேண்டும். அவருடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியான நிலையிலும், உடல் எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். மேலும் இதய நோய், மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட மருத்துவப் பிரச்சினைகளும் அவருக்கு இருக்கக் கூடாது.

ஆனால், கனிகாவின் குடும்ப மருத்துவப் பின்னணியில் இத்தகைய பிரச்சினைகள் இருப்பதால் அவருடைய பிளாஸ்மா பிற நோயாளிகளுக்குப் பயன்படுத்த ஏற்புடையது இல்லை என்று லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.