சசிகலா ஆதரவு முன்னாள் தாதா மரணம்!

பெங்களூருவை கலக்கிய முன்னாள் தாதாவாகவும், பின்னர் சமூக சேவகராக மாறியவருமான முத்தப்ப ராய், இன்று (மே 15) அதி இரவில் மரணம் அடைந்தார். 68 வயதான முத்தப்ப ராய் மூளைப் புற்று நோய் காரணமாக கடந்த ஒரு வருடமாக அவதிப்பட்டு வந்தார்.


1980 களின் நடுப்பகுதியில் பெங்களூருவை கலக்கிய தாதா முத்தப்ப ராய். கத்தி, அரிவாள்களே பெங்களூரு தாதாக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த நிலையில் முதன் முதலாக பெங்களூருவில் துப்பாக்கி கலாசாரத்தை அறிமுகப்படுத்தியவர். 1980களில் இருந்து பல ஆண்டுகள் தாதாவாக வலம் வந்த முத்தப்ப ராய், பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கினார். மும்பை, துபாய் வரை தனது நிழல் உலக ஆதிக்கத்தை விரிவாக்கினார். கடந்த 2001 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபர் சுப்புராஜ் கொலை வழக்கில் முத்தப்ப ராய் குற்றம் சாட்டப்பட்டார். 2002 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றார். தன் மீதான வழக்குகளை எல்லாம் முடித்த முத்தப்ப ராய் பின்னர், தனது பகுதியான வடக்கு கர்நாடகத்தில் ஜெய கர்நாடகா என்ற சமூக அமைப்பைத் தொடங்கி பல்வேறு சேவைகளை செய்யத் தொடங்கினார். கர்நாடக அதலடிக் அசோசியேஷன் தலைவராகவும் இருந்தவர் முத்தப்ப ராய்.



இவருக்கு தமிழ்நாட்டு அரசியலோடு நெருங்கியத் தொடர்பு உண்டு. சசிகலாவுக்கு மிகவும் அறிமுகமான முத்தப்ப ராய், எவ்வித அனுமதியும் இன்றி சசிகலாவை சிறைக்குச் சென்று பார்த்து வரும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர் என்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறப்புக்குப் பின், 2017 பிப்ரவரியில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதேவருடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அதை ஒட்டி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அல்லது அவர்களை வளைக்க தயாரானது அரசு. முதல் ஆளாக ஜக்கையன் எம்.எல்.ஏ. எடப்பாடி அணிக்கு மாறினார். அப்போது மீதமிருக்கும் எம்.எல்.ஏ.க்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தினகரன் அவர்கள் அனைவரையும் புதுச்சேரி ரிசார்ட்டுக்கு மாற்றினார். பின் அவர்கள் அனைவரும் மைசூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக அரசு, மத்திய அரசு என இரு அரசு இயந்திரங்களின் முற்றுகையையும் மீறி சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை மைசூரில் பாதுகாப்பாய் வைத்திருந்தவர் முத்தப்ப ராய்தான். அந்த வகையில் முத்தப்பராயின் மறைவுச் செய்தியை கேட்டு சசிகலா வருத்தப்பட்டிருக்கிறார்.

-வேந்தன்
Blogger இயக்குவது.