புழுதி -பாகம் 6!!

சிவசங்கரி எழுதிய "ஆஹா..அந்த அரபு நாடுகள்" புத்தகமும் இன்று வரை என் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது,  கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பத்து  பாகங்களையும் ஆழ்ந்து உணர்ந்து படித்திருக்கிறேன்.   புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றும்  என்பதில் எந்த ஐயமும் கிடையாது.  என்னுடைய வாழ்க்கையும் அதற்கு உதாரணம்,


அப்பா அடிக்கடி சொல்வார், " புத்தகங்கள்   என்பது அதை எழுதுகிறவரின் மூளையும் சிந்தனையுமே,  அவற்றுக்கு    விலை நிர்ணயிக்க முடியாது,  அதில் பதிக்கப்பட்டிருக்கிற விலை,  அச்சு கூலியும் நேரவிரயத்திற்கான செலவும் மட்டுமே,  என.

சிறுவயது முதலே உறவுகளோடு அதிகம் ஒட்டிக்கொள்ளாதவன் நான்,  அம்மா தான் என்னை இழுத்து இழுத்து ஒட்டவைக்க முயற்சிப்பார்,  என் தனித்துவமான சிந்தனைகளோ  இயற்கை மற்றும் இலக்கியம் மீதான காதலோ ஏதோ ஒன்று என்னை தள்ளியே நிற்கச் செய்தது,

அன்றாட பத்திரிகையில் வரும் அடக்குமுறை செய்திகள் எனக்குள்ளும் சில எண்ணங்களை விதைத்தது.  அந்த எண்ணத்தை செயலாக்க வேண்டும் என்ற முனைப்பில் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்.

இயற்கையின் பல வண்ணங்களையும்  மனித சஞ்சாரத்தின் பல்வேறுபட்ட  வாழ்வியல் நிலைகளையும் காணவேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் எனக்குள் துளிர்த்துக் கொண்டிருந்தது,  எல்லோரையும் போல அல்லாது வித்தியாசமான ஒரு மனிதனாக வாழவேண்டும் என்பதில் நான் நிறைந்த ஆர்வம் கொண்டிருந்தேன்,

அன்று யாருக்கும் சொல்லாமல் மறுபடியும் காட்டிற்குச் சென்றுவிட்டேன்,  அந்த தருணத்தில் நான் உணர்ந்து கொண்ட மன இனிமையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.  பல நாட்களாக தன் சேயை காணாத தாயின் அரவணைப்பு போல இருந்தது அந்நிலை,  காட்டு மரங்களும் பறவைகளும் "அன்பு....அன்பு...." என்று  பெயர் சொல்லி அழைப்பது போன்ற நினைப்பில் நான் பிரமித்துப்  போனேன்,

தடிகளையும் கொடிகளையும் வெட்டி இரண்டு மரங்களுக்கு நடுவே பரண் ஒன்றை அமைத்துவிட்டு அதன் மீது ஏறிப்படுத்துவிட்டேன், அன்று மாலை வரை கையில் கொண்டு போயிருந்த புத்தகங்களோடு என் நேரம் நகர்ந்து கொண்டிருந்தது,

வீட்டில் என்னை காணாததால் அம்மாவுக்கு  நான் காட்டிற்குத்தான் போயிருபபேன் என்பது தெரியும்,  மாலை வரை என்னைக் காணாததால் மாலையில் அப்பாவை அனுப்பியிருந்தார்,

நான் வாகாக படுத்திருந்து புத்தகம் வாசிப்பதை பார்த்து விட்டு அப்பா எதுவும் சொல்லவில்லை,  ஆழமாக ஒரு பார்வை பார்த்து, "வீட்டில் யாருடனாவது பிரச்சினையா?" என்றார்.

நான், "இல்லை"  என்று தலையை ஆட்டினேன். ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டி என் பதிலை ஆமோதித்த அப்பாவின் செய்கையில் ஏதோ ஒரு செய்தி இருந்தது.

அன்புச்செல்வன் என்ற என்னுடைய பெயர் எனக்கு மிகவும் பிடித்தமானது,  இயற்கையின் படைப்புகள்  அத்தனையையும் நான் அளவு கடந்து நேசித்தேன்,  ரசித்தேன். வாரத்தில் ஒருநாள்  மாற்று திறனாளி போராளிகள் இருக்கும் வசிப்பிடத்திற்குச் சென்றுவிடுவேன்,

அங்கங்களை இழந்தபோதும் மனவலிமை இழக்காத  அவர்களின் தைரியம் , நகைச்சுவை உணர்வு இவை எல்லாம் எனக்கு வாழ்க்கை மீதான வசீகரிப்பை அள்ளி அள்ளித் தந்தது.......

தொடரும்.....

கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.