எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதிஎடுத்து தொடர்ந்தும் நாம் பயணிக்கவேண்டிய தேவையுள்ளது

எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு அரசு பொறுப்புச் சொல்லாமையால் எதிர்காலத்திலும் எமது மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கேள்விக்குரியானதாகவே உள்ளது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.


பிரதேச சபை வளாகத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

இறுதி யுத்தம் 2009 இல் மேற்கொள்ளப்பட்டது. இவ் யுத்தத்தில் இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிறுவர்கள் கூட கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் அகோரம் ஒன்றை நடத்தி முடித்து அதற்கொரு வெற்றி விழாவையும் அரசு கொண்டாடியது. எமது மக்கள் கொன்றழிக்கப்பட்டமையை அ10ட்சியாளர்களும் தென்னிலங்கையின் இனவாதிகளும் கண்காட்சிகளாக நடத்தினர். இதுவே போரின் பின்னரான நிதர்சனமாக உள்ளது.
தமிழ் மக்கள் மீது நடைபெற்றது போன்ற மிகப்பாரதூரமான சர்வதேசத்தின் கண்டணத்திற்கு உள்ளான போர் பற்றி அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்குத் தயாரில்லை. மாறாக அது அநீதிகள் இழைக்கப்படவில்லை என்ற விம்பத்தையே அது ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இந் நிலையில் நினைவேந்தலை நாம் நீதி கிட்டவில்லை என்ற அழுத்தமாகவும் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான அஞ்சலிப்பாகவும் மேற்கொள்கின்றோம். இந்நிலையில் நினைவேந்தலை ஆட்சியாளர்களால் காலத்திற்குக் காலம் ஜீரணிக்கமுடியவில்லை என்ற போதும் தமிழ் மக்கள் எதிர்ப்புக்களை மீறி அனுஸ்டிக்கின்றனர்.

இறுதி யுத்தத்தில் பாரதூரமான மனித உரிமை மீறலும் படுகொலைகளும் இடம்பெற்று 11 ஆண்டுகள் கடந்த போதும் எமக்கு நீதி கிட்டவில்லை. படுகொலைகளுக்கு பொறுப்புச் சொல்லாத நாட்டின் கலாச்சாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதுடன் எதிர்காலத்தில் படுகொலைகள் நாட்டில் பதிவாகாது என்பதற்கான உத்தரவாதத்தினையும் இல்லாமல் செய்துள்ளது.

யுத்தத்தின் பின் அநீதிகளுக்கு நீதியின்றி எல்லாவற்றினையும் சகித்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு வாழக்கற்றுக்கொள்ளுங்கள் என்பதுவே தமிழ் மக்களை நோக்கிய ஆட்சியாளர்களின் போதிப்பாகவுள்ளது. இதற்குள்ளாக எமது மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதிஎடுத்து தொடர்ந்தும் நாம் பயணிக்கவேண்டிய தேவையுள்ளது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.