பயணிகள் ரயில் போக்குவரத்து ஜூன் 30 வரை ரத்து!

கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஜூன் 30 ஆம் தேதி வரை இந்திய ரயில்வே, பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 18ஆம் தேதிக்குப் பிறகு நாலாம் கட்ட ஊரடங்கு சில மாற்றங்களுடன் அமலுக்கு வரும் என்று முதல்வர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார். இதனிடையே மே 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இதற்கான ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் , தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.எனினும், கொரோனா பரவல் சென்னையில் அதிகமாக இருப்பதால் டெல்லி முதல் சென்னை வரையிலான ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற ரயில்வே அமைச்சகம், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் மே 14 மற்றும் மே 16 தேதிகளில் ரயில் சேவை இயக்கப்படும் . இவ்விரு நாட்களைத் தவிர இதர நாட்களில் வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ஜூன் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ரயில் டிக்கெட்களும் ரத்து செய்யப்பட்டு, கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும். ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்திருந்தால் தாமாக ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு, கட்டண தொகை மீண்டும் அவரவர் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஷார்மிக் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா
Powered by Blogger.