முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் விக்னேஸ்வரன் கூறிய கருத்து!!

இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முள்ளிவாய்க்காலில் 11 வருடங்களுக்கு முன்னர் எமது மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பின் வலிகள் ஒருபுறம், நீதி கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த தடைகள் வந்தாலும் நீதிக்கும் உரிமைகளுக்குமான எமது போராட்டம் ஓயாது என்ற வேட்கை ஒருபுறம், தொடந்து எமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் கட்டமைப்பு மற்றும் கலாசார இனப்படுகொலையின் கொடூரங்கள் ஒருபுறமுமாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்கள், படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை இன்றைய தினம் நினைவு கூர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்காலில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கான எமது மக்களுக்கு என்ன நடந்தது என்று இன்னமும் தெரியவில்லை. எமது அரசியல் கைதிகள் தொடர்ந்து சிறைகளில் வாடுகின்றார்கள். போரிலே ஊனமுற்றவர்களும், முன்னாள் போராளிகளும், விதவைகளும் தொடர்ந்து சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துவருகின்றார்கள். எமது தொல்லியல் கலாசார சின்னங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.
பல்லாயிரக்கணக்கில் எமது பூர்வீக நிலங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. உலகின் மூத்த மொழியான எமது தமிழ் மொழியை மற்றும் எமது பாரம்பரிய இருக்கையின் சின்னங்களை அழிக்கும் கைங்கரியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் தடுப்பதற்கு முடியாதவர்களாக நாம் தொடர்ந்து ஏமாளிகளாக இருந்துவருகின்றோம். இதுதான் உண்மை. இதற்கு காரணம், முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் அணுகுமுறைகளில் நாம் விட்ட தவறுகளே ஆகும்.
எறிகணைகள் வீசியும் விமானங்கள் மூலம் குண்டுகள் போடப்பட்டும், பாதுகாப்பு வலயங்களுக்குள் மக்களை செல்லுமாறு கூறிவிட்டு அவர்கள் அங்கு தாக்கப்பட்டும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் போடப்பட்டும், சரண் அடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கில் எமது தமிழ் மக்கள் மாத்திரம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டமையை இனப்படுகொலை என்று ஏற்க மறுத்தோம். மாறாக நடந்தது இனப்படுகொலை அல்ல என்று வாதிட்டோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு தொடர்ந்து கால அவகாசம் பெற்றுக்கொடுத்து எமக்கு நாமே நீதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் செயற்பட்டோம். எமது வரலாற்றில் இருந்து எந்தப் பாடங்களையும் கவனத்தில் எடுக்காமல் சுதந்திரம் கிடைத்த நாள் முதல் எமக்கு எதிராக திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்திவரும் சிங்கள ஆட்சியாளர்களிடம் சரணாகதி அரசியலை மேற்கொண்டோம். இதன் காரணமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதி எம்மை விட்டு வெகு தொலைவுக்கு சென்றுவிட்டது. எமது உரிமைகளை பெறுவதற்கும் வாழ்வை வளமாக்குவதற்குமான அரசியல் தீர்வும் தொலை தூரம் சென்றுவிட்டது.
எமக்கான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொண்டு எமது பொருளாதாரம், கலை, கலாசாரம் மற்றும் பண்பாடுகளை செழுமைபெறச் செய்வதற்கு முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கான நீதி மிக முக்கியமானது. இந்த நீதியின் அவசியத்தை குறைத்து மதிப்பிட்டோ அல்லது அதனை கடந்து சென்றோ ஒருபோதும் எமது அரசியல் உரிமைகளை நாம் பெற்றுக்கொள்ளவோ அல்லது வளமான எதிர்காலத்தை கட்டி எழுப்பவோ முடியாது. ஆகவே, இதனை மையமாக வைத்து எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் அரசியல், இராஜதந்திர போராட்ட உத்திகளையும் வழி பாதைகளையும் மீள் பரிசீலனை செய்யும் கால கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்.
நாம் விட்ட தவறுகளே இன்று இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டன. தொடர்ந்தும் நாம் ஏமாளிகளாக இல்லாமல் கட்சி அரசியலுக்கு அப்பால் புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவை அமைத்து இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் பரிகார நீதியினுடனான இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பவற்றை முன்கொண்டு செல்வோமானால் நாம் எமது இலக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடியும். இதற்காக கட்சி அரசியலுக்கப்பால் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதுடன் ஏனைய அரசியல் கட்சிகளையும் இதுவிடயத்தில் இணைந்து செயற்படவருமாறு அழைப்புவிடுக்கின்றேன்.
நீதிக்கும் சமாதானத்துக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நாம் எந்தளவுக்கு எமக்கு எதிரான இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றோமோ அந்தளவுக்கு நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வழிகளும் வாய்ப்புக்களும் அதிகரிப்பன.
நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்கு முறையான வழிகளில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நாம் முன்னகர்த்தி செல்வதானது மீண்டும் அந்த குற்றங்கள் புரியப்படுவதைத் தடுப்பதுடன் நிலையான நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்படுவதற்கும் திறவுகோலாக அமையும். குற்றம் இழைத்தவர்களுக்கு அவற்றில் இருந்து தண்டனை விலக்களிக்கப்படுவதானது சமூகக் கட்டமைப்பை சீர்குலைப்பதுடன் அரசாங்கத்தின் மீது அவ நம்பிக்கையையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதுடன் நிலையான சமாதானம் ஏற்படுவதற்கும் குந்தகமாக அமையும்.
எமது மக்கள் மத்தியிலே தமக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற உணர்வு ஏற்படும்போது தான் அவர்கள் மத்தியில் இருந்து ஏமாற்றம் , சலிப்பு , கசப்புணர்வு ஆகியன அகன்று நல்லிணக்கம் ஏற்பட்டு சமாதான நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான நம்பிக்கையையும் அது ஏற்படுத்தும். குற்றம் செய்தவர்களின் மீது வழக்குகள் தொடரப்படுவது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவுகள் பட்ட துன்பங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் அவர்கள் தொலைத்த கௌரவத்தை அவர்கள் மீள நிலைநாட்டுவதற்கும் உதவுகின்றது.
இந்த அடிப்படையில் தான் நீதியும் சமாதானமும் ஒன்றை ஒன்று மேம்படுத்தி வலுப்படுத்துகின்றன. ஆனால், இன்று தமிழ் மக்களை பொறுத்தவரையில் நீதி முற்றிலுமாக மறுக்கபட்டுள்ள நிலையில், எம் மீது தொடர்ந்தும் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இது தற்செயலாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ ஏற்பட்ட ஒன்று அல்ல. நன்கு திட்டமிட்ட முறையில் எமது இருப்பு, அடையாளம் ஆகியவற்றை இலங்கையில் இல்லாமல் செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளே இவை.
இத்தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உக்கிர நிலை பெற்றுள்ளது. ஆகவே நாம் அரசியல், இராஜதந்திர வழிகளில் போராடித்தான் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அரசாங்கத்துக்கு மயில் இறகுகளினால் தடவுவதுபோல ஒத்தடம் கொடுப்பதன் மூலம் எமக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. கடந்த ஐந்து வருட கால அனுபவங்கள் எம்மைச் சரியான வழியில் இட்டுச் செல்ல உதவி புரிய வேண்டும்.
மேலும் யுத்தத்தில் என்ன நடந்தது, எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பவற்றை எல்லாம் எமது சிங்கள சகோதரர்கள் அறிந்து கொள்வதும் அவசியமானது. ஆனால், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பில் சிங்கள மக்கள் இருட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். சாட்சிகள் இல்லா யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றுமே சிங்கள மக்கள் இன்றும் நினைக்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் வேண்டுமென்றே கொல்லப்பட்டமையை அநேகமான சிங்கள மக்கள் நம்புவதற்கு தயார் இல்லை.
விடுதலைப்புலிகள் ஏன் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள் என்ற உண்மையையும், எமது உண்மையான வரலாறு, இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை தமிழ் மக்களுக்கு நடந்துகொண்டு இருக்கின்ற அநீதிகள் ஆகியவற்றை சிங்கள மக்கள் அறிய வேண்டும். இதை எடுத்தியம்ப நாங்கள் தயக்கம் காட்டவேண்டியதில்லை. அப்பொழுதுதான் நிலையான நல்லிணக்கமும் சமாதானமும் ஏற்படமுடியும்.
அதனால்த் தான் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்பு தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை அவசியம் என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகின்றேன். உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும். இதில் பழிவாங்கும் நோக்கம் எதுவும் எமக்கு இல்லை. இலங்கையிலே நிலையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முரண்பாடுகளுக்கான கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி எமது மக்கள் மீது தொடரும் இனப்படுகொலையை நாம் நிறுத்த வேண்டும்.
இதனை ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே, ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வைக்கின்றேன்.
கோவிட் 19 தாக்கம் காரணமாக முழு உலகமும் பெரும் நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்பட்டு மீண்டு எழுவதற்கான எத்தனங்களில் முழுக் கவனத்தைத் திசை திருப்பி இருப்பதை நாம் அறிவோம். கோவிட் 19 க்கு எதிரான சர்வதேச முன்னெடுப்புக்களுக்கு தமிழ் மக்கள் தமது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட உலகம் முழுவதிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து எந்தவிதமான அலட்சியமோ கவனக்குறைவோ இல்லாமல் ஐ. நா சபையும் சர்வதேச சமூகமும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என்ற மன உறுதியுடன் நாம் தொடர்ந்தும் பயணிப்போம். நீதிக்கான எமது போராட்டத்தை புதிய உத்திகள் மற்றும் புதிய வழிகளில் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து குறிப்பாக எமது இளையோர் சமுதாயத்தை உள்ளீர்த்து மீண்டும் வடக்கு கிழக்கில் தற்சார்பு பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். இனியொரு விதி செய்வோம் என்று இந்த நினைவு நாளில் உறுதிகொள்வோம்.
முள்ளிவாய்க்காலில் 11 வருடங்களுக்கு முன்னர் இந் நாளில் உயிர் நீத்த அனைவரையும் நினைத்து, அவர்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து என் இந்தச் சிற்றுரையை முடிவுக்கு கொண்டு வருகின்றேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.