சிறப்புக் கட்டுரை: கொரோனா கேடும் வறுமைக்கோடும்!

கா.கணேசன்
மானுட உலகம் இப்படியொரு நெருக்கடியான சூழலைக் கண்டதில்லை. எங்கு திரும்பினாலும் கொரோனா செய்திகள் நம்மை அச்சுறுத்துகின்றன.
கொரோனா பாதிப்புகள் நாடு முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கில் படிப்படியாக நகர்ந்து ஜூன் மாதத்தை அடைந்து விட்டோம். இன்னும் ஊரடங்கு நீடிக்கிறது. இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. கோடிக்கணக்கான ஏழைகள் படும் இன்னல்களைக் கண்டுகொள்ள முன்வராத அரசுகள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நேசக்கரம் நீட்டுவதை வெளிப்படையாகவே செய்ய தொடங்கிவிட்டன. வறுமையில் வாடும் மக்கள் கண்டுகொள்ளப்படாத சமூகமாக ஆக்கப்படுவது காலத்தின் கொடூரம். கொரோனா நோய்த் தொற்றில் இருந்துகூட தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்கவே இயலாது என்ற கொடூரச் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா விளைவிக்கும் கேட்டினை விட வறுமைக்கோட்டில் வாடும் மக்களின் பாடு பெரும்பாடாக உள்ளது.

வள்ளுவனின் பார்வையில் வறுமை

‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்று வாழ்வது வாழ்க்கையல்ல. உண்பதற்கு உணவே இல்லாமல் பசியால் வாடும் கொடுமையும் கையறு நிலையும் இச்சமூகமெங்கும் பரவியிருக்கிற அவலம் சொல்லிமாளாது. பசி குறித்து ஒரு கவிதை இப்படிச் சொல்கிறது, ‘கண்களுக்குப் புலப்படாத உயிரின் நிர்வாணம் பசி.’ நம் தமிழ்ப் பாட்டன் திருவள்ளுவன் திருக்குறளில் மிகத் தெளிவாக வறுமையின் சூழலை விவரித்தான். ‘ஒருவன் நெருப்பிலே இருந்து உறங்குதல் கூடும்; ஆனால், வறுமை வந்தபோது எவ்வகையிலும் கண்மூடி உறங்குதல் அரிது’ என்றான்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.

அதுபோல், மற்றொரு குறளில், ‘வறுமையை விடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால், வறுமையைப் போல் துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை’ என்று ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளான்.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

இந்த அரசுகள் இதை உள்வாங்கியதா... என்ற கேள்வி எழுகிறது. வறுமையை நிர்ணயிக்கும் அளவுகோலில் நிகழும் அரசியல் சிக்கல்களை கொரோனா அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்துவிட்டது. நாடே முடங்கிக் கிடக்கும் இச்சூழலில் பசியால் வாடும் மக்கள் கோடிக்கணக்கில் உள்ளதை கொரோனா எவ்வித பாரபட்சமும் இன்றி வெளிக்கொணர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் வறுமையும் வறுமைக்கோடும் சார்ந்த நுண்ணரசியலை புரிந்துகொள்வதும், திரும்பிப் பார்ப்பதும் அவசியமாகிறது.

வறுமைக்கோடும் நீண்ட கால அரசியலும்

வறுமை எனும் வார்த்தைக்கான பொருள் முற்றிலும் அரசியல் சார்ந்ததாக மாற்றப்பட்டுவிட்டது. ஏழையின் நிலையில் மாற்றத்தைக் கொணரும் எண்ணம் புறந்தள்ளப்பட்டு, வறுமை எனும் வார்த்தைக்குள்ளான அரசியல் பல பிரதமர்களைக் கடந்து தற்போது மோடியையும் வந்தடைந்திருக்கிறது. உலக வங்கி, பொருளாதார அறிஞர்கள், நிபுணர் குழுக்கள் எனப் பலரும் வறுமையை அளவிட முயன்றும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான எந்த ஒரு வரையறையும் இன்று வரை உருவாக்கப்படவில்லை. வறுமையை வரையறுக்கும் முன் அவற்றை வரையறுப்பவர்கள் யார்? அவர்கள் வறுமையை எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஏழைகள் பற்றிய அவர்களது மதிப்பீடு என்ன? அவர்களுக்கு அரசுகளால் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்ன?

இந்தக் கேள்விகளைப் பொறுத்தே வறுமைக்கான வரையறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து இப்போது வரை வறுமையும் வறுமைக்கோடும் நீண்ட அரசியலைக் கடந்து வந்திருக்கிறது.

வறுமைக்கான வரையறைகளும் அவை உணர்த்தும் அரசியலும்

இந்தியாவில் வறுமையை வரையறுக்க பல்வேறு நிபுணர் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்கள் வரையறுத்தக் கோடுகள் கட்சிகள் கடந்து வறுமையை அளவீடு செய்யும் மதிநுட்ப அரசியலைத் தெளிவாக உணர்த்துகிறது.

தாதாபாய் நவ்ரோஜியின் வறுமைக்கான வரையறை: இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கான அளவீட்டுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தவர் தாதாபாய் நவ்ரோஜி. ‘இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் ஆட்சியும்’ என்ற அறிக்கையில் 1876ஆம் ஆண்டு இந்த அளவீட்டினை முன்வைத்தார். 1867-68ஆம் ஆண்டின் விலைவாசியின் அடிப்படையில் புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளருக்கு ஆண்டுக்கு ரூ.16இல் இருந்து ரூ.35 வரை வருமானம் கிடைக்காவிட்டால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ளவர் என்ற கணக்கீட்டினை முன்வைத்தார்.



கே.டி.ஷாவின் வறுமைக்கான வரையறை: காங்கிரஸ் கட்சி வறுமையை வரையறை செய்வதற்காக நேரு தலைமையில் 1939ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் செயலாளரான கே.டி.ஷா அளித்த அறிக்கையில் வறுமைக்கோட்டின் அளவீடாக ஒரு மாதத்துக்குத் தனிநபர் வருமானம் ரூ.15இல் இருந்து ரூ.20 என மதிப்பிட்டிருந்தார். ஒரு வயது வந்த தொழிலாளிக்கு 2,400இல் இருந்து 2,800 கலோரி வரையிலான ஆற்றல் தேவையை பூர்த்தி செய்ய முடிந்தால் அவர் வறுமையிலிருந்து மீண்டவர் எனக் கருதலாம் என்று குறிப்பிட்டார்.



பிதம்பர் பந்த் என்பவரின் வறுமைக்கான வரையறை: 1960-61இல் இந்தியாவின் திட்டக்கமிஷன் தலைவராக இருந்த பிதம்பர் பந்த் குழுவினர், தனிநபர் மாத வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ.20க்குள், நகர்ப்புறங்களுக்கு ரூ.25க்குள் இருந்தால் அது வறுமைக்கோடு என வரையறுத்தனர்.

டண்டேகர் மற்றும் ராத் என்பவரின் வறுமைக்கான வரையறை: 1971இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற பொருளியல் நிபுணர்கள் குழு, வறுமைக்கான வரையறையாக ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக்கோடு’ என வரையறுத்தார்கள். இந்தக் கணக்கீடு மிக முக்கியமானதாகும்.



Y.K.அலாக் என்பவரின் வறுமைக்கான வரையறை: 1979இல் இந்திய திட்டக்கமிஷன் நியமித்த Y.K.அலாக் தலைமையிலான குழு, வறுமையைக் கணக்கிட நாளொன்றுக்கு ஒரு தனி நபருக்குக் கிராமப்புறங்களில் 2,400 கலோரி ஆற்றலும், நகர்ப்புறத்தில் 2,100 கலோரி ஆற்றலும் தேவை எனக் குறிப்பிட்டது. 1973-74 விலைவாசியின் அடிப்படையில் மாத வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ.49.10 எனவும், நகர்ப்புறங்களுக்கு ரூ.56 எனவும் வரையறை செய்தது. இந்த வரையறையின்படி, 1973-74இல் நாட்டின் பாதி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தனர்.

லாக்டாவாலாவின் வறுமைக்கான வரையறை: 1993இல் வறுமையை கணக்கிட திட்டக்கமிஷன் நியமித்த லாக்டாவாலா பணிக்குழு ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான வரையறையைத் தெரிவித்தது.

சுரேஷ் டெண்டுல்கர் - வறுமைக்கான வரையறை: 2004-05ஆம் ஆண்டு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான குழு கிராமப்புறங்களில்

நாளொன்றுக்கு ரூ.27 என்றும் நகர்ப்புறங்களில் ரூ.33 என்றும் வறுமைக்கான வரையறையாகப் பரிந்துரைத்தது.



சி.ரங்கராஜனின் வறுமைக்கான வரையறை: 2012ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.32 எனவும் நகர்ப்புறங்களில் ரூ.47 எனவும் வறுமைக்கோட்டுக்கான வரையறையாகத் தீர்மானித்தது.

உலக வங்கியின் கணக்கீடு

மேற்காணும் வரையறைகளை உற்றுக் கவனித்தால், வறுமைக்கோட்டினை தீர்மானிப்பதில் நிலவும் நுண்ணிய அரசியலை உணர முடியும். இந்தியாவில் வறுமையில் வாடும் மக்களை மேம்படுத்துவதை விட்டுவிட்டு அதன் சதவிகிதத்தைக் குறைத்து காட்டவே எல்லா அரசுகளும் முயன்றிருக்கின்றன. இவர்கள் கணக்குப்படி, கிராமப்புறத்தில் ஒரு மாதத்துக்கு 800 ரூபாயும் வருடத்துக்கு 9,600 ரூபாயும் ஒருவரால் சம்பாதிக்க முடியுமென்றால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர். அதேபோல் நகர்ப்புறத்தில் ஒரு மாதத்திற்கு 1,175 ரூபாயும் வருடத்துக்கு 14,100 ரூபாயும் ஒருவரால் சம்பாதிக்க முடியுமென்றால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர். உலக வங்கியும்கூட 2018ஆம் ஆண்டு வறுமைக்கோடு அளவை தீர்மானித்தபோது, ஒரு நாளுக்கு 1.90 அமெரிக்க டாலருக்குள் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் அவர் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவர் என்றது. அதாவது, இன்றைய ரூபாய் மதிப்பீட்டின் படி, ஒரு நாளைக்கு ரூ.75.56/- என்றால் ஒரு மாதத்திற்கு (25 நாள் கணக்கீடு) ரூ.1,889/- என வறுமையின் எல்லையைத் தீர்மானிக்கிறது.

வறுமைக்கோடல்ல; சாகாக்கோடு

இந்தக் கணக்கீடுகளின் லட்சணமே அவர்களின் நுண்ணரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இந்த வருமானத்தைக் கொண்டு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர்கூட உயிர் வாழ முடியாது என்ற கருத்தைப் புறந்தள்ளியது. பொருளியல் வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும்போது, ‘வறுமையை வரையறுக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு பொருத்தமில்லாத அர்த்தமற்ற செயலாக இருக்கிறது’ என்றார். அதாவது, ‘வறுமைக்கோடு’ என்பதைவிட இதைச் ‘சாகாக்கோடு’ என்று தான் சொல்ல வேண்டும் என்றார். ‘இவர்கள் தீர்மானிக்கிற வறுமைக்கோடு அளவுக்கான பணம் இருந்தால் சாகாமல் இருக்கலாமே ஒழிய, அதை வைத்து மாண்போடு வாழ முடியாது’ என்றார்.

சர்வதேச சமூகத்தில் காட்டிய பிம்பம்

விலைவாசி உயர்வைக்கூட இவர்களது கணக்கீடுகளில் முதன்மைப்படுத்தவில்லை என்பதையே காணமுடிகிறது. திட்டக்குழுவின் அணுகுமுறை, “ஒரு மனிதனின் அடிப்படை தேவை வெறும் உணவு மட்டும் தான், அந்த குறைந்தபட்ச உணவிருந்தால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேலே வந்து விடுகிறான்” என்ற நிலைப்பாடு எள்ளளவும் ஏழைகளின் பால் அக்கறை இல்லாத நிலையையே காட்டுகிறது. நடைமுறையில் இருக்கும் வறுமை நிலையை அரசு தனது அறிக்கைகளில் குறைத்துக் காட்டவே விரும்பியது. இதன் மூலம் சர்வதேச சமூகத்தில் போலி பெருமை முகமூடிகளோடு உலா வந்தது. விலைவாசி உயர்வைக் குறைத்து மதிப்பிட்டும், மக்களின் ஆற்றல் தேவைகளைக் குறைத்து மதிப்பிட்டும் வறுமை வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டு வருவதாக சர்வதேச சமூகத்தில் பதிவிட்டது. தற்போது இந்த வறுமை அரசியலை கொரோனா அம்பலப்படுத்திவிட்டது. ஊரடங்குச் சூழலில் வருமானமின்றி ஒரு வேலைச் சோற்றுக்கு வழியின்றி கையறு நிலையில் துடித்தோர்க்கு... வெறும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அவர்கள் பசியாறியதாக தன் கடமையை முடித்துக் கொண்டது.

கொரோனா உருவாக்கிய வறுமையின் கொடூரம்

கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையின் காரணமாக, இந்தியாவில் 13.5 கோடி பேர் வேலையிழப்பார்கள் எனச் சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகச் செய்தி வெளிவருகிறது. நாடு முழுவதும் வேலையிழப்பும் வறுமையும் அதிகரிக்கும் என ஆய்வில் கூறப்படுகிறது. மேலும் 12 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், நான்கு கோடி பேர் மோசமான வறுமை நிலைக்குச் செல்லக்கூடும் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவருகிறது. ஏழைகளும், ஏழையிலும் ஏழையும் கொடூர பாதிப்பில் இருக்கிறார்கள் என்பது திண்ணம். இவர்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார்கள். இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெதுவுமில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிபோயிருக்கிற நிலையை வேடிக்கை பார்த்தது போதும். இதிலிருந்து இவர்கள் மீள்வது எப்படி? அரசுகள் என்ன செய்யப்போகிறது?

2020இல் வறுமைக்கோட்டை மறுவரையறை செய்ய வேண்டும்

போதும்... நிறுத்திக்கொள்ளுங்கள் உங்கள் நுண்ணரசியலை. இனி வறுமையில் ஒரு போதும் அரசியல் செய்யாதீர்கள். கொரோனா சூழலில், வறுமையில் இருப்போரை வாழவைக்க உங்கள் வறுமைக்கோடு கணக்கு முறையை அழித்துவிட்டு... புதிய கோடு ஒன்றை போடுங்கள். கொரோனா கேடு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து, அந்த புதிய வறுமைக்கோட்டை தீர்மானிப்போம். 1971இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் நிபுணர்கள் குழு, ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையே ‘வறுமைக்கோடு’க்கான வரையறை என்று நிர்ணயித்த கருத்தினை உள்வாங்கி, 2020இல் உள்ள விலைவாசியை கவனத்தில்கொண்டு ‘புதிய வறுமைக்கோடுக்கான வரையறையை’ அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்மானித்தாக வேண்டும். அதை அடிப்படையாகக்கொண்டே அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அது வறுமையை ஒழிக்கும் திட்டமாக உயிர்த்தெழ வேண்டும். ஐநா சபையின் நிலைத்த வளர்ச்சிக் கொள்கையின் (SDG) அம்சங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி 2030ஆம் ஆண்டில் வறுமையை வேரறுக்க வேண்டும். இதை ஆளும் அரசுகள் முன்னெடுக்குமா!

கட்டுரையாளர் குறிப்பு



கா.கணேசன், கடந்த 23 ஆண்டுகளாக, மனித உரிமைத் தளத்தில் செயல்பட்டு வருகிறார். மக்கள் கண்காணிப்பகம் அமைப்பில் பணியாற்றி நூற்றுக்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த களஆய்வுப் பணிகளையும் பல்வேறு ஆய்வுகளையும் ஒருங்கிணைத்திருக்கிறார். தமிழக அரசின் மாநில தத்து (Adoption) வள ஆதாரத் திட்டத்தின் மாநிலத் திட்ட மேலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது குழந்தை உரிமைகள், குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட மனித உரிமைப் பணிகளைச் செயற் தளத்தில் முன்னெடுத்து வருகிறார். மாநில அளவில் மனித உரிமைச் சார்ந்த பயிற்சிகளையும் ஒருங்கிணைத்து வரும் செயற்பாட்டாளர்.
Blogger இயக்குவது.